7 வருடங்களில் இதுவே முதல்முறை: சீனா செல்லும் பிரதமர் மோடி! | SCO | China | PM Modi
வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்குச் செல்லவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடைசியாக கடந்த 2018-ல் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி சீனாவுக்குச் சென்றார். இதைத் தொடர்ந்து 2020-ல் ஏற்பட்ட கால்வான் மோதல்களுக்குப் பிறகு சீனாவிற்கு மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். கடந்த 2024 அக்டோபரில் ரஷ்யாவின் கஸன் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின்போது சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு தலைவர்களும் கஸனில் சந்தித்த பிறகு, 2020-ல் இந்திய மற்றும் சீனப் படைகள் மோதிக்கொண்ட லடாக்கில் உள்ள இரண்டு முக்கியப் புள்ளிகளான டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் துருப்புக்களை விலக்கிக்கொள்ளும் திட்டத்தை இந்தியாவும் சீனாவும் அறிவித்தன.
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்பு, ஆகஸ்ட் 30-ம் தேதி பிரதமர் மோடி ஜப்பானுக்குச் செல்கிறார். அங்கு ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இணைந்து வருடாந்திர இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடியின் வருகைக்கு முன்பாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்ந்த கூட்டங்களுக்காக சீனாவுக்குச் சென்றனர். இதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு பயணித்து அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதற்கும், அமெரிக்க டாலரின் மேலாதிக்கத்தை சவால் செய்யும் நடவடிக்கைக்காகவும் பிரிக்ஸ் நாடுகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிவைத்துள்ள நேரத்தில் பிரதமர் மோடி சீனாவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எனவே இந்த பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.