பிஎஸ்என்எல் 4ஜி சேவை: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி | BSNL 4G | PM Modi |

தொலைதொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளதாகவும் தகவல்...
பிஎஸ்என்எல் 4ஜி சேவை: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி | BSNL 4G | PM Modi |
1 min read

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையைப் பிரதமர் மோடி நாளை (செப்.27) தொடங்கி வைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:-

”பிரதமர் மோடி நாளை ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். அது பிரதமர் தலைமையில் உலகத்திற்கும், உலக சமூகத்திற்கும் இந்தியாவின் பங்களிப்பாக இருக்கும். இது தொலைதொடர்புத் துறைக்கு ஒரு புதிய யுகம். உலகில் தொலைதொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் நான்கு பெரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் நுழைந்துள்ளது. டென்மார்க், ஸ்வீடன், தென் கொரியா, சீனா ஆகிய நான்கு பெரும் நாடுகள் மற்றும் ஐந்து பெரும் நிறுவனங்கள் உள்ளன. தற்போது, இந்தியா உலக வரலாற்றில் தொலைத்தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் ஐந்தாவது நாடாகவும், ஆறாவது நிறுவனமாகவும் உள்ளது.

இந்தப் பெரிய மாற்றத்தை பிரதமர் மோடி முன்னெடுத்து, உந்துதல் அளித்து, வழிநடத்தினார். 2020-ல், 4ஜி உபகரணங்களுக்கான டெண்டர்கள் விடுக்கப்பட்டபோது, வெளிநாட்டு உபகரணங்களை வாங்குவதற்கு பதிலாக, நமது சொந்த 4ஜி உபகரணங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம் என்று ஒரு துணிச்சலான முடிவை அவர் எடுத்தார். அதன்படி, வரலாற்று ரீதியாக வெளிநாட்டு தொழில்நுட்பத்தை வாங்குபவராக இருந்த நம் நாடு, வெறும் 22 மாதங்களில், சொந்த உள்நாட்டு 4ஜி உபகரணங்களை உருவாக்கும் நாடாக மாறி சாதனை படைத்துள்ளது.

இத்துடன் பிரதமர் மோடி நாளை இன்னொரு திட்டத்தையும் தொடங்கி வைக்கவுள்ளார். அது, பிஎஸ்என்எலின் 4ஜி சேவையாகும். நாடு முழுவதும் உள்ள 98,000 தளங்களில் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவின் எந்த பகுதியும் விடுபடாது. நமது 4ஜி டவர்கள் மற்றும் பிடிஎஸ்கள் ஏற்கனவே நாடு முழுவதும் 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகின்றன. இது முற்றிலும் மென்பொருள் மூலம் இயக்கப்பட்டு, தடையில்லாமல் 5Gக்கு மேம்படுத்தப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார். இதன்படி ரூ.37,000 கோடி செலவில் இந்தியா முழுவதும் 4G சேவை தொடங்கப்படவுள்ளது. இதில் மொத்தம் 222 கிராமங்களில் புதிய டவர்கள், 35 கிராமங்களில் 4G டவர் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கும் 4ஜி சேவைகள் வழங்கப்படவுள்ளன. யூஎஸ்ஓஎஃப் உதவியுடன் தமிழ்நாட்டில் 620 கிராமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றுக்கு 4ஜி சேவை தர திட்டமிட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in