நமோ பாரத் ரேபிட் ரயில் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை இன்று (செப்.16) குஜராத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
குஜராத் மாநிலத்தின் அஹமதாபாதில் இருந்தபடி நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை இன்று மாலை 5 மணி அளவில் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. தொடக்க விழாவுக்கு சில மணிநேரத்துக்கு முன்பு, இந்த வந்தே மெட்ரோவின் பெயர் நமோ பாரத் ரேபிட் ரயில் என மாற்றம் செய்யப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தன் அதிகாரபூர்வ எக்ஸ் சமூகவலைதளக் கணக்கில் அறிவித்தது.
குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் மற்றும் பூஜ் நகரங்களுக்கு இடையேயான 359 கி.மீ தூரத்தை, இந்த நமோ பாரத் ரேபிட் ரயில் 5 மணி நேரம், 45 நிமிடங்களில் கடக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்துக்கான கட்டணம் ரூ. 455 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாளை (செப்.17) முதல் இந்த ரயில் சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.
நாட்டின் பிற மெட்ரோ ரயில்கள் அந்தந்த நகரங்களுக்குள், குறைவான தூரத்தை இணைக்கும் வகையில் பயணிக்கும் நிலையில், முதல்முறையாக நூற்றுக்கணக்கான கி.மீ தூரத்தில் இருக்கும் இரு வேறு நகரங்களை இணைக்கிறது இந்த முதல் வந்தே மெட்ரோ ரயில்.
இந்த நமோ பாரத் ரேபிட் ரயிலில் உள்ள 12 பெட்டிகளில் குளிர்சாதனம், தானியங்கிக் கதவுகள் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் உள்ள 12 பெட்டிகளில் மொத்தம் 1,150 இருக்கைகள் உள்ளன. மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இந்த ரேபிட் ரயிலால் பயணிக்க முடியும்.