
பிரான்ஸ் அதிபருடன் இணைந்து அந்நாட்டில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் அழைப்பின் பேரில், மூன்று நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இன்று (பிப்.10) காலை தில்லியில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்குக் கிளம்பிச் சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும், உலகளவில் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்கும் பாரிஸ் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பிரான்ஸ் அதிபருடன் இணைந்து மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்குகிறார். இதனைத் தொடர்ந்து டிரம்ப் விடுத்த அழைப்பின் பேரில் அமெரிக்காவுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி.
இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் வெளியிட்ட பதிவில் பிரதமர் மோடி கூறியதாவது,
`அடுத்த சில நாட்கள் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளேன். பாரிஸில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டிற்கு இணை தலைமை தாங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் பரந்த அளவிலான பொது நன்மையைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த, பாதுகாப்பான மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான கூட்டு அணுகுமுறை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவிருக்கிறோம்.
பிரான்ஸிலிருந்து, அதிபர் டொனால்ட் டிரம்பின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் பயணமாக அமெரிக்காவிற்குச் செல்கிறேன். எனது நண்பர் அதிபர் டிரம்பைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே ஒரு விரிவான உலகளாவிய திட்டமிட்ட கூட்டாண்மையை உருவாக்குவதில் அவரது முதலாவது பதவிக்காலத்தில் இருந்து இணைந்து பணியாற்றியதை மிகவும் அன்புடன் நினைவு கூறுகிறேன்.
இருநாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். அத்துடன் உலகத்திற்கான சிறந்த ஓர் எதிர்காலத்தை வடிவமைப்போம்.’ என்றார்.