அலாஸ்கா உச்சி மாநாடு: டிரம்ப் சந்திப்பு குறித்து பிரதமர் மோடியிடம் புதின் விளக்கம்! | Modi | Putin | Russia

அலாஸ்கா உச்சிமாநாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்தியா பாராட்டுகிறது.
அலாஸ்கா உச்சி மாநாடு: டிரம்ப் சந்திப்பு குறித்து பிரதமர் மோடியிடம் புதின் விளக்கம்! | Modi | Putin | Russia
ANI
1 min read

அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான தனது சமீபத்திய சந்திப்பு குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தொலைபேசி வாயிலாக அழைத்துப் பகிர்ந்துகொண்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் கணக்கில் இன்று (ஆக. 18) வெளியிட்ட பதிவில், `எனது நண்பர் அதிபர் புதினின் தொலைபேசி அழைப்புக்கும், அலாஸ்காவில் அதிபர் டிரம்புடனான தனது சமீபத்திய சந்திப்பு குறித்த தனது நுண்ணறிவைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி. உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது.

மேலும் இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்கிறது. வரும் நாள்களில் எங்களது தொடர்ச்சியான பரிமாற்றங்களை எதிர்நோக்குகிறேன்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம், அமைதி ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பை இந்தியா வரவேற்றது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், `அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையேயான அலாஸ்கா உச்சி மாநாட்டை இந்தியா வரவேற்கிறது. அமைதியை எதிர்நோக்கிய அவர்களின் தலைமை மிகவும் பாராட்டத்தக்கது.

உச்சிமாநாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்தியா பாராட்டுகிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் மட்டுமே முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். உக்ரைனில் நடைபெறும் மோதலுக்கு விரைவில் முடிவு காண உலகம் விரும்புகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகவும் கொடிய மோதலாகக் கருதப்படும் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது அல்லது தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பாக எந்த ஒரு ஒப்பந்தத்தையும் இறுதி செய்யாமல் டிரம்ப், புதின் இடையேயான அலாஸ்கா உச்சிமாநாடு நிறைவடைந்தது.

logo
Kizhakku News
kizhakkunews.in