இந்தியர்களின் ஆசிகளுக்கு நன்றி: பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பதிவு | PM Modi |

அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்று 25-வது ஆண்டுக்குள் நுழைகிறேன் என்று பதிவு...
இந்தியர்களின் ஆசிகளுக்கு நன்றி: பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பதிவு | PM Modi |
https://x.com/narendramodi
2 min read

அரசு தலைமைப் பொறுப்பு வகிக்கத் தொடங்கி 25-வது ஆண்டுக்குள் நுழைவதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களுக்கு தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2001 முதல் 2014 வரை குஜராத் மாநிலத்தின் முதல்வராகப் பதவி ஏற்றிருந்தார். 2001, 2002, 2007 மற்றும் 2012 என 4 முறை முதல்வராக இருந்த அவர், 2014-ல் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு கடந்த 2019 மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக உள்ளார். இதற்கிடையில், அரசின் தலைமைப் பொறுப்பேற்று 25 ஆண்டுக்குள் அடி எடுத்து வைப்பதாக நெகிழ்ச்சியான பதிவைப் படங்களுடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

"இதே நாள் 2001-ல் நான் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றேன். இந்தியர்களின் தொடர் ஆசிகளுக்கு நன்றி. அரசின் தலைமைப் பொறுப்பு வகிப்பதில் 25 -வது ஆண்டுக்குள் நான் நுழைகிறேன். இத்தனை ஆண்டுகளாக நம்மைப் பேணி வளர்த்த நம் தேசத்தின் வளர்ச்சிக்கும், மக்கள் வாழ்வின் உயர்வுக்கும் என்னால் ஆனதைச் செய்ய வேண்டும் என்பதே எனது நீங்காத இலக்காக உள்ளது.

பாஜக மிகவும் சோதனையான சூழலில் என்னை நம்பி எனக்கு குஜராத்தின் முதல்வராகப் பொறுப்பு கொடுத்தது. அந்த ஆண்டில்தான் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மாநிலம் அவதியுற்றது. அடுத்தடுத்த ஆண்டுகளில் புயல்கள், வறட்சி, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை அம்மாநிலத்தைத் தாக்கின. அந்தச் சவால்களே மக்களுக்குச் சேவை செய்து, குஜராத்தை வீரியத்துடனும் நம்பிக்கையுடனும் கட்டி எழுப்ப வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் பலப்படுத்தின.

நான் முதல்வராகப் பதவியேற்றபோது எனது தாயார் என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது. ”உனது பணியைப் பற்றிய புரிதல் எனக்கு இல்லை. ஆனாலும் உன்னிடம் இரண்டு விஷயங்களைச் சொல்வேன். ஒன்று, நீ எப்போதும் ஏழைகளுக்காக உழைக்க வேண்டும். இரண்டாவது, நீ ஒருபோதும் லஞ்சம் வாங்கக் கூடாது” என்றார். நான் என் அனைத்துப் பணிகளையும், வரிசைகளில் கடைசியில் இருக்கும் நபருக்கும் என் சேவை சென்றடையும் வகையில் சிறந்த நோக்கத்துடனும் தொலைநோக்குடனும் செய்வேன் என்று மக்களிடம் கூறினேன்.

இந்த 25 ஆண்டுகள் பல அனுபவங்களால் நிறைந்துள்ளன. நாம் ஒற்றுமையாகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். நான் முதல்வராகப் பொறுப்பேற்றபோது குஜராத் மீண்டும் எழுச்சி பெறவே முடியாது என்று நம்பப்பட்டது. விவசாயிகள் உட்பட பலரும் மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து புகார் கூறினர். விவசாயம் மந்த நிலையில் இருந்தது. தொழில்துறையின் வளர்ச்சி தேக்கமடைந்திருந்தது. அங்கிருந்து, குஜராத்தை நல்லாட்சியின் சக்தி வாய்ந்த மாநிலமாக மாற்ற மக்களுடன் கூட்டாக உழைத்தோம்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமான குஜராத், விவசாயத்தில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக மாறியது. வர்த்தக கலாசாரம் வலுவான தொழில்துறையாக விரிவடைந்தது. சமூக உட்கட்டமைப்புகள் ஊக்கமடைந்தன. இவற்றைச் சாதிக்க மக்களுடன் இணைந்து உழைக்க நேர்ந்த வாய்ப்பு திருப்தி அளிக்கிறது.

2014 மக்களவைத் தேர்தலின் பிரதமர் வேட்பாளராகும் பொறுப்பு, 2013-ல் எனக்கு வழங்கப்பட்டது. அப்போது நாடு நம்பிக்கை மற்றும் நிர்வாக நெருக்கடியை அனுபவித்தது. அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஊழல், குடும்ப ஆட்சி உள்ளிட்டவை காரணமாக மோசமாகச் செயல்பட்டது. உலக நாடுகளின் வரிசையில் இந்தியா பலவீனமாகக் காட்சியளித்தது. ஆனால், இந்திய மக்களின் ஞானம், கடந்த 3 தசாப்தங்களாக எங்கள் கூட்டணிக்கு அமோக பெரும்பான்மையைக் கொடுத்ததுடன் நாங்கள் முழு பெரும்பான்மையைப் பெறுவதையும் உறுதி செய்தது.

கடந்த 11 ஆண்டுகளாக இந்திய மக்களான நாம் ஒன்றாக உழைத்துப் பல மாற்றங்களைச் சாதித்துள்ளோம். நமது முயற்சிகள் பெண்கள் சக்தி, இளைஞர்கள் சக்தி என அனைத்துத் தரப்பினரின் அதிகாரத்தையும் உயர்த்தியுள்ளது. 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஏழ்மையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள். முதன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரங்களுக்கு நடுவே இந்தியா தற்போது ஒளிர்கிறது. உலகின் மிகப்பெரிய அளவிலான மருத்துவம் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் தாயகமாக இந்தியா திகழ்கிறது. விவசாயிகள், நமது தேசம் சுயசார்பாக இருப்பதை உறுதி செய்யும் கண்டுபிடிப்பு முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து துறைகளிலும் இந்தியாவைச் சுயசார்பு வாய்ந்ததாக மாற்றும் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம். இதன்மூலம் “இது சுதேசி தேசம்” என்று கர்வத்தோடு சொல்ல முடியும்.

இந்திய மக்களின் தொடர் நம்பிக்கை மற்றும் அன்பிற்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம் தேசத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே எனக்குச் சிறந்த கௌரவமும், என் கடமையும், நோக்கமும் என் நன்றியுணர்வின் வெளிப்பாடும் ஆகும். நம் நாட்டு அரசியலமைப்பின் தொடர் வழிகாட்டுதலுடன், நம் அனைவரின் கடமையான வளர்ச்சியடைந்த பாரதத்தை எட்ட இனி வரும் காலங்களில் இன்னும் கடுமையாக நான் உழைப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in