
பிரயாக்ராஜ் மஹா கும்பமேளாவில் புனித நீராடினார் பிரதமர் நரேந்திர மோடி.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மஹா கும்பமேளா, கடந்த ஜனவரி 13 அன்று உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் கோலாகலமாகத் தொடங்கியது.
கும்பமேளா நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், சாதுக்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பிரயாக்ராஜில் முகாமிட்டுள்ளனர். பிப்ரவரி 26-ல் நிறைபெறும் இந்த நிகழ்வில் சுமார் 40 கோடி பேர் வரை கலந்துகொள்வார்கள் என உ.பி. மாநில அரசு எதிர்பார்க்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் உ.பி. முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்டு கங்கையில் புனித நீராடினார்கள்.
இந்நிலையில், கும்பமேளா நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருப்பது தொடர்பாக முன்பு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்தாண்டு டிசம்பர் அன்று பிரயாக்ராஜில் ரூ. 5,500 கோடி மதிப்பீட்டில் 167 மேம்பாட்டுத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்று (பிப்.5) காலை பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமம் பகுதிக்குச் சென்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் படகுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பொதுமக்கள் கங்கையில் புனித நீராடுவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து கங்கையில் அவர் புனித நீராடினார்.