மணிப்பூர், பிரஜ்வல் ரேவண்ணா பற்றி பிரதமர் பதிலளிக்க வேண்டும்: ஆம் ஆத்மி

ஸ்வாதி மாலிவால் விவகாரம் குறித்து பதிலளிக்க கெஜ்ரிவால் மறுத்துவிட்டார்.
மணிப்பூர், பிரஜ்வல் ரேவண்ணா பற்றி பிரதமர் பதிலளிக்க வேண்டும்: ஆம் ஆத்மி

மணிப்பூர், பிரஜ்வல் ரேவண்ணா, மல்யுத்த வீராங்கனைகள் விவகாரங்கள் குறித்து பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் பதிலளிக்க வேண்டும் என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வர் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் மீது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, ஸ்வாதி மாலிவால் முறையாகப் புகார் எதுவும் அளிக்கவில்லை. பாஜகவினர் இந்த விவகாரத்தைக் கொண்டு ஆம் ஆத்மி மீது விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஸ்வாதி மாலிவால் விவகாரம் குறித்து பதிலளிக்க கெஜ்ரிவால் மறுத்துவிட்டார். பேசுவதற்கு இதைவிட நிறைய முக்கியமானப் பிரச்னைகள் இருப்பதாக அகிலேஷ் யாதவ் பதிலளித்தார்.

எனினும், ஸ்வாதி மாலிவால் விவகாரம் குறித்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் பதிலளித்தார்:

"மணிப்பூரில் நிகழ்ந்ததைப் பார்த்து நாடு முழுவதும் மிகுந்த வேதனையில் இருந்தது. ஆனால், பிரதமர் மோடி மௌனம் காத்தார். பிரஜ்வல் ரேவண்ணா ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்தார். ஆனால், பிரதமர் மோடி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, ஸ்வாதி மாலிவால் காவல் துறையால் தாக்கப்பட்டார். இந்த விவகாரங்களில் பிரதமர் மோடி மௌனம் காத்தார்.

ஆம் ஆத்மி எங்களுடைய குடும்பம். தெளிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளோம். நான் குறிப்பிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் பாஜகவும் பிரதமர் மோடியும் பதிலளிக்க வேண்டும்.

ஸ்வாதி மாலிவால் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது" என்றார் சஞ்சய் சிங்.

இந்த விவகாரம் குறித்து நேற்று மாலை விளக்கமளித்த சஞ்சய் சிங், "இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார்" என்று உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in