மஹாராஷ்டிர மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள வத்வான் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல்லை இன்று (ஆகஸ்ட் 30) நாட்டிய பிரதமர் மோடி, அம்மாநிலத்தின் ராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து உடைந்து நொறுங்கியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 4-ல் இந்திய கடற்படை தினத்தை ஒட்டி, கடற்படையின் ஏற்பாட்டில் மஹாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தின் மால்வனில் உள்ள ராஜ்கோட் கோட்டையில், சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
இந்நிலையில், பால்கர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில், `சத்ரபதி சிவாஜி என்பது எங்களுக்கு வெறும் பெயரல்ல. இன்று நான் தலை வணங்கி, என் கடவுள் சத்ரபதி சிவாஜி மஹராஜ் முன்பு மன்னிப்புக் கோருகிறேன். இந்தியத் தாய் நாட்டின் தலைசிறந்த மகனான வீர் சாவர்கரைத் தொடர்ந்து அவமதிக்கும் கூட்டத்தைப்போல் நாங்கள் இல்லை, எங்கள் கொள்கை வேறு’ என்று பேசினார் பிரதமர் மோடி.
இந்தக் கூட்டத்துக்கு முன்பு மஹாராஷ்டிர மாநிலத்தின் வடக்குக் கடலோர பால்கர் மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள வத்வான் துறைமுகக் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டினார் பிரதமர் மோடி. இந்தப் புதிய துறைமுகம் ரூ. 76 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
சிலை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, `மீண்டும் சத்ரபதி சிவாஜி சிலையை நிறுவ மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.