ஊழலுக்கானப் பள்ளியை நடத்தும் பிரதமர் மோடி: ராகுல் காந்தி

"'ஊழல் அறிவியல்' எனும் பாடத்தை பிரதமர் மோடியே விரிவாகக் கற்பித்து வருகிறார்."
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
ராகுல் காந்தி (கோப்புப்படம்)

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் ஊழலுக்கான பள்ளியை நடத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நேற்று நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ல் நடைபெறுகிறது. மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தக்கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.

இதை முன்னிட்டு பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட் தேர்தல் நிதி பத்திர முறையைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடி ஊழலுக்கானப் பள்ளியை நடத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"பிரதமர் மோடி இந்தியாவில் ஊழலுக்கானப் பள்ளியை நடத்தி வருகிறார். இங்கு, 'நன்கொடை தொழில்' உள்பட 'ஊழல் அறிவியல்' எனும் பாடத்தை பிரதமர் மோடியே விரிவாகக் கற்பித்து வருகிறார்.

சோதனைகள் (சிபிஐ, அமலாக்கத் துறை,வருமான வரித் துறை சோதனைகள்) மூலம் நன்கொடை வசூலிப்பது எப்படி? நன்கொடையைப் பெற்றுக்கொண்டு ஒப்பந்தங்களை வழங்குவது எப்படி? ஊழல் செய்பவர்களின் கறையை வாஷிங் மெஷின் மூலம் நீக்குவது எப்படி? ஜனநாயக அமைப்புகளைக் கொண்டு 'சிறை மற்றும் பிணை' விளையாட்டை எப்படி விளையாட வேண்டும்? என பிரதமர் பாடம் நடத்தி வருகிறார்.

ஊழலின் குவியலாக மாறியுள்ள பாஜக, இந்தப் பாடத்தை கட்சித் தலைவர்களுக்குக் கட்டாயமாக்கியுள்ளது. இதன் விளைவுகளை நாடு அனுபவிக்கிறது.

ஊழலுக்கான இந்தப் பள்ளிக்கும், பாடத் திட்டத்துக்கும் இண்டியா கூட்டணி அரசு முற்றிலுமாக முடிவு கட்டும்" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in