
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன், காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளார்.
இந்திய பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், இருவரும் உரையாடும் படம் வெளியிடப்பட்டு, அதில், `சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்’ என்று பதிவிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இருவரும் உரையாடும் காணொளி நரேந்திர மோடியின் எக்ஸ் கணக்கில் வெளியானது.
இந்த உரையாடலிம்போது, `இன்று, நீங்கள் உங்கள் சொந்த ஊரிலிருந்து, உங்கள் நாட்டிலிருந்து மிகத் தொலைவில் இருக்கிறீர்கள், ஆனால் இன்று உங்கள் நாட்டு மக்களின் இதயங்களில் நீங்கள் மிகவும் நெருக்கமானவராகிவிட்டீர்கள்’ என்று பிரதமர் கூறினார்.
மேலும், `உங்கள் பெயர் `சுப’ என்பதைக் கொண்டுள்ளது, உங்களின் பயணம் ஒரு புதிய சகாப்தத்தின் `சுப’ தொடக்கமாகும்’ என்றார்.
`இந்த நேரத்தில், நாம் இருவரும் மட்டுமே பேசுகிறோம், ஆனால் 140 கோடி இந்தியர்களின் எண்ணங்கள் என்னுடன் உள்ளன. எனது குரல் அனைத்து இந்தியர்களின் உற்சாகத்தையும் சுமந்துகொண்டிருக்கிறது’ என்றார்.
அத்துடன், தேசியக் கொடியை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எடுத்துச் சென்றதற்காக சுக்லாவை பிரதமர் மோடி பாராட்டினார். சர்வதேச விண்வெளி நிலையத்தின் நிலைமை குறித்தும், அங்கு அனைத்தும் சரியாக இருக்கிறதா என்றும் கேட்டு சுபான்ஷு சுக்லாவிடம் பிரதமர் நலம் விசாரித்தார்.
இந்த உரையாடலின்போது, ஸ்டெம் செல்கள் குறித்த தனது பணியை இன்று (ஜூன் 28) தொடங்கவுள்ளதாக சுக்லா பிரதமரிடம் தெரிவித்தார்.
மேலும், `உங்களுக்கும் (பிரதமர் மோடி) 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் இங்கே மிகவும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளேன், இது ஒரு புதிய அனுபவம். பூமியிலிருந்து சுற்றுப்பாதைக்கான 400 கி.மீ பயணம் எனது பயணம் மட்டுமல்ல, முழு நாட்டின் பயணமும் ஆகும்’ என்றார்.