
தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், பீஹாரிலும் இன்று (பிப்.17) காலை நில அதிர்வு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் பதற்றத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார் பிரதமர் மோடி.
இன்று அதிகாலை 5.36 மணி அளவில், தலைநகர் தில்லியில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. தில்லியை மையமாகக் கொண்டு இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும், பூமிக்குள் 5 கி.மீ. ஆழத்திலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
மிகவும் குறிப்பாக, தில்லியின் தௌலா குவான் (Dhaula Kuan) பகுதி இந்த நில அதிர்வின் மையப்புள்ளியாகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக தன் எக்ஸ் தள பதிவில் பிரதமர் மோடி கூறியதாவது,
`தில்லி மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் வலியுறுத்துகிறேன். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்கள்’ என்றார்.
நில அதிர்வு மண்டல வகைப்படுத்தலின்படி, உயர் நில அதிர்வு மண்டலத்தில் (மண்டலம் IV) தில்லி அமைந்துள்ளது. இதனால் இமய மலைத்தொடர், சீனா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் ஏற்படும் நில அதிர்வுகளின் தாக்கங்களைக்கூட தில்லியில் உணர முடியும்.
தில்லியைத் தொடர்ந்து, காலை 8.02 மணி அளவில் பீஹாரின் சிவான் மாவட்டத்தை மையமாகக் கொண்டு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வும் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், வடகிழக்கு மாநிலமான சிக்கிமிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 2.3 ஆக பதிவாகியுள்ளது.