
ஆப்பிரிக்க நாடான கானாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் தில்லியில் இருந்து நேற்று (ஜூலை 2) காலை விமானத்தில் கிளம்பி, அரசுமுறைப் பயணமாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.
தலைநகர் அக்ராவில் உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஜான் மஹாமா வரவேற்றார். ராணுவ அணிவகுப்புடன், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள மரியாதை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று இரவு அக்ராவில் உள்ள ஜூபிலி ஹவுஸில் வைத்து அதிபர் மஹாமாவுடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், ஆழப்படுத்தவும் மேற்கொள்ளவேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு கலாச்சார பரிமாற்றம், பாரம்பரிய இசை போன்றவற்றை உள்ளடக்கிய நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியிட்டப்பட்ட கூட்டு செய்திக்குறிப்பில், இந்தியா-கானா அரசு ரீதியிலான உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளாதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் தலைமைப் பண்பை அங்கீகரிக்கும் விதமாக கானாவின் மிக உயரிய, `தி ஆபிஸர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.