ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்போமா?: பிரதமரின் பேச்சுக்கு கார்கே பதிலடி

"எங்களுடைய அரசு ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்புச் சட்டப்படி அனைத்தும் பாதுகாக்கப்படும். நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுவோம்."
மஹாராஷ்டிரத்தில் இண்டியா கூட்டணித் தலைவர்களுடன் கார்கே
மஹாராஷ்டிரத்தில் இண்டியா கூட்டணித் தலைவர்களுடன் கார்கேANI

மக்களைத் தூண்டும் வகையில் பேசும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சமாஜவாதியும், காங்கிரஸும் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்துவிடுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியிருந்தார்.

மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதற்கு எதிர்வினையாற்றியுள்ளார்.

"நாங்கள் இதுநாள் வரை புல்டோசரைப் பயன்படுத்தியதில்லை. மக்களைத் தூண்டும் வகையில் பேசுபவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் மோடி மக்களைத் தூண்டுகிறார். எங்களுடைய அரசு ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்புச் சட்டப்படி அனைத்தும் பாதுகாக்கப்படும். நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுவோம்.

மஹாராஷ்டிரத்தில் 48 இடங்களில் 46 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். மக்களே இதைக் கூறுகிறார்கள். எங்களுடையக் கூட்டணி நிறைய இடங்களில் வெற்றி பெற்று, பாஜகவை வீழ்த்தும்.

உண்மையான அரசியல் கட்சிகளிடமிருந்து பறிக்கப்பட்ட தேர்தல் சின்னங்கள், பாஜகவை ஆளும் கட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இது நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் முடிவு. ஆனால், இவையனைத்தும் மோடியின் அறிவுறுத்தலின் பெயரில் நடந்துள்ளது.

தில்லியில் மூன்று இடங்களில் மட்டும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்துள்ளோம். சண்டிகரில் கூட்டணி உள்ளது. குஜராத் மற்றும் ஹரியாணாவில் அவர்களுக்கு இடங்களை ஒதுக்கியுள்ளோம். இந்த இடங்களில் மட்டும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.

மமதா பானர்ஜியைப் பொறுத்தவரை, வெளியிலிருந்து ஆதரவளிப்பேன் என்று அவர் முதலில் கூறினார். அண்மையில் பேசும்போது, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அரசுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றார். எனவே, அவர் கூட்டணியில்தான் உள்ளார்" என்றார் மல்லிகார்ஜுன கார்கே.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர் உடனிருந்தார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in