
1947-ல் நடந்த இந்திய பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறி, அவர்களுக்கு தன் அஞ்சலிகளை செலுத்தியுள்ளார் பிரதமர் மோடி. இன்று (ஆகஸ்ட் 14) `பிரிவினை கொடூரங்கள் நினைவு நாள்’ அனுசரிக்கப்படுவதை ஒட்டி, பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களின் துணிவை அவர் பாராட்டியுள்ளார்.
`பிரிவினை கொடூரங்கள் நினைவு நாளில் இந்திய பிரிவினையால் கடுமையாக பாதிக்கப்பட்டு துயரங்களை அனுபவித்தவர்களை நினைவு கூறுவோம். இது அவர்களின் துணிவை நினைவு கூறும் நாளாகும். பிரிவினையால் பாதிக்கப்பட்ட பலர் அவர்களின் வாழ்வை மறுசீரமைத்து நிறைய சாதனைகள் புரிந்துள்ளனர். நமது தேசத்தில் ஓற்றுமையையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க இன்று நாம் உறுதியேற்போம்’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
`இன்று அனுசரிக்கப்படும் பிரிவினை கொடூரங்கள் நினைவு நாளில், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு துன்பத்தை அனுபவித்தவர்களுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். வரலாற்றை நினைவு கூறி, அதில் இருந்து கற்றுக்கொள்ளும்போது ஒரு தேசத்தால் வலுவான எதிர்காலத்தை உருவாக்க முடியும். இந்த நாளை நினைவு கூறுவது தேசத்தின் கட்டமைப்பில் ஒரு முக்கியமான விஷயம்’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
ஓவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 14-ல் `பிரிவினை கொடூரங்கள் நினைவு நாள்’ அனுசரிக்கப்படும் என்று 2021-ல் முதல் முறையாக அறிவித்தது மத்திய அரசு.
பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பதற்கு முன்பு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1947 இந்திய சுதந்திர சட்டத்தை நிறைவேற்றியது. இதன்படி அன்றைய பிரிட்டிஷ் இந்தியா, இந்தியா, பாகிஸ்தான் என்று இரு சுதந்திர நாடுகளாக பிரிக்கப்பட்டது. இந்த பிரிவினை லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.