தில்லியில் பொங்கல் வைத்து வழிபட்ட பிரதமர் மோடி: விழாவில் பராசக்தி படக்குழு பங்கேற்பு | Pongal | PM Modi |

பராசக்தி படத்தில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்...
தில்லியில் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி
தில்லியில் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடிANI
2 min read

தில்லியில் மத்திய இணையமைச்சர் எல். முருகனின் வீட்டு பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பொங்கல் கொண்டாடினார்.

தமிழர் திருநாளான பொங்கலை மத்திய இணையமைச்சர் எல். முருகன் தில்லியில் உள்ள தனது இல்லத்தில் ஆண்டுதோறும் பிரமாண்டமான முறையில் கொண்டாடி வருகிறார். கடந்த ஆண்டு இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அதேபோல் இந்த ஆண்டும் பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பூஜை செய்து பொங்கல் வைத்தார்.

பொங்கல் விழாவில் பிரதமர் உரை

அதன்பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: “இன்று பொங்கல் ஒரு உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது. தமிழ் சமூகமும், தமிழ் கலாச்சாரத்தை நேசிக்கும் மக்களும் இதை உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். நானும் அவர்களில் ஒருவன். இந்த சிறப்பு மிக்க பண்டிகையை உங்கள் அனைவருடனும் கொண்டாடுவது எனக்குக் கிடைத்த ஒரு பாக்கியம். உணவு வழங்குபவர், பூமி மற்றும் சூரியனின் கடின உழைப்புக்கு நன்றி உணர்வு உள்ளது.

விவசாயிகளை மேம்படுத்தும் மத்திய அரசு

உலகில் அனைத்து நாகரிகங்களும் பயிர் தொடர்பான பண்டிகையைக் கொண்டாடுகின்றன. தமிழ்க் கலாசாரத்தில், விவசாயி, வாழ்க்கையின் அடித்தளமாகக் கருதப்படுகிறார். நமது விவசாயிகள் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் வலுவான பங்கு வகிக்கின்றனர். தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் விவசாயிகள் பெரும் பலமாகத் திகழ்கின்றனர். வேளாண்மையையும் விவசாயி நலனையும் மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ் வரலாற்றைத் தரிசித்தேன்

கடந்த ஆண்டு, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பிரார்த்தனை செய்தேன். வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமத்தில் காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான கலாசார ஒற்றுமையைக் கண்டு வியந்தேன். ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தின் திறப்பு விழாவிற்குச் சென்றபோது ​​தமிழ் வரலாற்றின் மகத்துவத்தை மீண்டும் ஒருமுறை தரிசித்தேன். சில மாதங்களுக்கு முன், கோவையில் இயற்கை விவசாயம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்டேன்” என்றார்.

கலை நிகழ்ச்சிகளை ரசித்த பிரதமர்

தொடர்ந்து விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தில்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த பல தலைவர்கள் பங்கேற்றனர். பராசக்தி படக்குழு சார்பாக நடிகர்கள் ரவி மோகன், சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சியின்போது ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் திருவாசகம் தொகுப்பிலிருந்து பாடல்களைப் பாடினார். அனைத்துக் கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் கண்டு ரசித்தார்.

பராசக்தியில் சர்ச்சை இல்லை

பொங்கல் விழா முடிந்தவுடன் நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பராசக்தி படத்தில் எவ்வித சர்ச்சையும் கிடையாது. மக்கள் அந்தப் படத்தைப் புரிந்துகொண்டு சரியான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எதைச் சொல்ல நினைத்தோமோ அது மக்களைச் சென்றடைகிறது. படத்தை முழுமையாகப் பார்த்தால் அனைவருக்கும் புரியும்” என்றார்.

Summary

Prime Minister Modi celebrated Pongal by attending the Pongal celebration at the home of Union Minister of State L. Murugan in Delhi.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in