இந்தியாவில் பிரிவினைக்கு அடித்தளம் போட்டது காங்கிரஸ்: பிரதமர் மோடி விமர்சனம் | PM Modi |

குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி...
குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி
குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி
2 min read

குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் பிரிவினைக்கு காங்கிரஸ் அடித்தளம் போட்டது என்று விமர்சித்தார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று புகழப்படும் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் 600 அடி உயர பிரமாண்ட சிலைக்குப் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். வல்லபாய் படேலின் சிலைக்குப் பிரதமர் பாதபூஜை செய்தபோது ஹெலிகாப்டர் மூலம் சிலையின் மீது மலர்கள் தூவப்பட்டன. அதைத் தொடர்ந்து சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பல்வேறு கலைஞர்களின் கண்கவரும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றைக் கண்டு ரசித்த பிரதமர் மோடி பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

“நம் தேசத்தின் ஒற்றுமையும் உட்பாதுகாப்பும் தீவிரமான ஆபத்தைச் சந்தித்து வருகிறது. பல தசாப்தங்களாக அயல்நாட்டினர் நமது நாட்டுக்குள் ஊடுருவி, நமது வளங்களை எடுத்துக்கொண்டு, நமது மக்கள்தொகை சமநிலையைக் குலைத்தார்கள். துரதிர்ஷ்டவசமாக முந்தைய அரசு இதை அலட்சியமாகப் புறக்கணித்துக் கண்மூடித் தனமாக இருந்துவிட்டது. வாக்கு அரசியலுக்காக அவர்கள் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்தார்கள். ஆங்கிலேயர்களிடம் கட்சி அமைப்பையும் ஆட்சியையும் பெற்றுக்கொண்ட காங்கிரஸ், அடிமைத்தன மனநிலையையும் வாங்கிக் கொண்டது.

இன்னும் சில நாள்களில் வந்தே மாதரம் பாடல் தனது 150-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறது. ஆங்கிலேயர்கள் 1905-ல் வங்காளத்தைப் பிரித்தபோது போராடிய குடிமக்களின் குரலாக வந்தே மாதரம் ஒலித்தது. தேசிய ஒற்றுமையின் குரலாக வந்தே மாதரம் மாறியிருக்கிறது. ஆங்கிலேயர்கள் வந்தே மாதரத்தைத் தடை செய்ய முயன்றார்கள். ஆனால் வெற்றியடையவில்லை. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வந்தே மாதரம் எதிரொலித்தது. ஆனால் ஆங்கிலேயர்கள் தவறியதை காங்கிரஸ் செய்ய நினைத்தது. மத அடிப்படையில் வந்தே மாதரம் பாடலில் ஒரு பகுதியை நீக்கியது. இதுவே ஆங்கிலேயரின் திட்டத்தைப் பின்பற்றி காங்கிரஸ் சமுதாயத்தைப் பிரிக்க முயன்றது என்பதைக் காட்டுகிறது. வந்தே மாதரம் பாடலில் ஒரு பகுதியை நீக்கி, திருத்தி, பிரிக்க நினைத்தபோதே காங்கிரஸ் இந்தியாவுக்குள் பிரிவினைக்கான அடித்தளத்தை அமைத்தது. இந்தப் பாவச் செயலைக் காங்கிரஸ் செய்யாமல் இருந்திருந்தால் இந்தியாவின் பிம்பம் வேறு விதத்தில் மாறியிருக்கும்” என்றார்.

Summary

PM Modi after paying respect to the Statue of Sardar Vallabhbhai Patel in Gujarat, criticized that the Congress laid the foundation for India's partition

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in