
எதிர்காலத்திற்காக தயாராக இருக்கும் நகரங்களை நோக்கி மாநிலங்கள் பணியில் ஈடுபடவேண்டும் என்றும், உலகத் தரத்திற்கு இணையாக குறைந்தபட்சம் ஒரு சுற்றுலாத் தலத்தையாவது மேம்படுத்தவேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களை கேட்டுக்கொண்டார்.
இன்று (மே 24) காலை தலைநகர் தில்லியில் தொடங்கிய நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிரதமர், 2047-ம் ஆண்டுக்குள் `விக்சித் பாரத்’ அல்லது `வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை எட்ட, வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்குமாறு முதலமைச்சர்களிடம் வலியுறுத்தினார்.
மேலும், நாடு தழுவிய அளவில் சுற்றுலாத்துறைக்கான பெரும் முன்னெடுப்பாக, ` ஒரு மாநிலம், ஒரு உலகளாவிய சுற்றுலா மையம்’ யோசனையை இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி முன்வைத்தார்.
`அனைத்து வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புடன் கூடிய உலகளாவிய தரத்திற்கு இணையாக, ஒரு மாநிலத்திற்கு குறைந்ததுபட்சம் ஒரு சுற்றுலா தலத்தையாவது மாநில அரசுகள் உருவாக்கவேண்டும் - `ஒரு மாநிலம் : ஒரு உலகளாவிய சுற்றுலா மையம். அண்டை நகரங்களை சுற்றுலா தலங்களாக மேம்படுத்தவும் இது வழிவகுக்கும்’ என்று அவர் பேசியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் மோதல் போக்கைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் முதல்முறையாக சந்திப்பு நடத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோதிலும், மத்திய அரசு தளர்ந்து போகவில்லை என்பதை சுற்றுலாத்துறை மீதான பிரதமர் மோடியின் கூற்று வெளிப்படுத்துகிறது. பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டதற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.