
தலைநகர் தில்லியில் இன்று (மே 25) நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பொதுவெளியில் பேசும்போதும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்க்குமாறும் அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நல்லாட்சியை மைய கருத்தாக முன்வைத்து நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களும், துணை முதல்வர்களும் கலந்துகொண்டார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்ததாகவும், கண்மூடித்தனமான கருத்துக்கள் தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு அவர் வலியுறுத்தியதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருந்தது.
மத்தியப் பிரதேச அமைச்சர், ஹரியானாவைச் சேர்ந்த எம்.பி. என பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாஜக தலைவர்கள் அண்மையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள், கட்சிக்கு தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டதைத் தொடர்ந்தே இந்த ஆலோசனையை பிரதமர் மோடி வழங்கியிருக்கக்கூடும்.
குறிப்பாக, `நாட்டின் பாதுகாப்புப் படைகள் பிரதமர் மோடிக்கு தலை வணங்கவேண்டும்’ என்று கூறி மத்திய பிரதேச துணை முதல்வர் ஜக்தீஷ் தேவ்டா சர்ச்சையை ஏற்படுத்தினார்.
மேலும் இந்த கூட்டத்தில், `ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான பிரச்னையில், எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் தலையீடும் இல்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் தரப்பால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்தே போர் நிறுத்தத்திற்கான முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.