
`அம்பேத்கருக்கு எதிராக பல பாவங்கள் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. அம்பேத்கரை அவமதிக்கும் காங்கிரஸ் கட்சியின் இருண்ட வரலாற்றை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா’ என கருத்து தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி
அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமித் ஷாவுக்கு ஆதரவாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பிரதமர் மோடி பதிவிட்டவை பின்வருமாறு,
`அம்பேத்கரை அவமதிக்கும் காங்கிரஸ் கட்சியின் இருண்ட வரலாற்றை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவர் முன்வைத்த உண்மை தகவல்களால் அவர்கள் திகைத்துப்போய்விட்டனர், அதனால்தான் அவர்கள் தற்போது நாடகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்காக வருத்தப்படுகிறேன். உண்மை என்னவென்பது மக்களுக்குத் தெரியும்.
காங்கிரஸ் கட்சியும், அதன் அழுகிய சுற்றுச்சூழலும் தங்களின் பொய்களால் பல வருடங்களாக அவர்கள் செய்த தவறுகளை, குறிப்பாக அம்பேத்கரை அவமதித்ததை மறைக்க முடியும் என்று நினைத்தால், அவர்கள் தவறு செய்கிறார்கள்!
அம்பேத்கரின் புகழை அழித்தொழிக்கவும், எஸ்.சி. எஸ்.டி. சமூகத்தினரை அவமானப்படுத்தவும், ஒரு குடும்பத்தின் தலைமையில் இயங்கும் ஒரு கட்சி, எப்படித் தந்திரங்களில் ஈடுபட்டது என்பதை பலமுறை இந்திய மக்கள் பார்த்துள்ளனர்.
எவ்வளவு வேண்டுமென்றாலும் காங்கிரஸ் கட்சி முயற்சி செய்துகொள்ளட்டும். ஆனால் எஸ்.சி. எஸ்.டி. மக்களுக்கு எதிரான மோசமான வன்முறைகள் காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்றதை அவர்களால் மறுக்கமுடியாது. பல வருடகாலம் அவர்கள் அதிகாரத்தில் இருந்தனர். ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் எஸ்.சி. எஸ்.டி. சமூகத்தினருக்கு அவர்கள் எதுவுமே செய்யவில்லை.
இரு முறை அம்பேத்கரை தேர்தலில் தோற்கடித்தது, அவருக்கு எதிரான தேர்தல் பரப்புரையில் பண்டித நேரு ஈடுபட்டது, அவருக்கு பாரத ரத்னா வழங்க மறுத்தது, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவரது உருவப்படத்தை வைக்க மறுத்தது போன்றவை அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த பாவங்களின் பட்டியலாகும்.
இன்று நாம் இப்படி இருப்பதற்குக் காரணம் அம்பேத்கர். அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற எங்களது அரசு கடந்த 10 வருடங்களாக கடுமையாக உழைத்துள்ளது. 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது, எஸ்.சி. எஸ்.சி. சட்டத்தை வலுப்படுத்தியது, தூய்மை இந்தியா திட்டம், பிரதமர் வீட்டுவசதித் திட்டம் போன்றவற்றை செயல்படுத்தியது என ஏழை, அடித்தட்டு மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்துள்ளோம்’ என்றார்.