இன்று (ஆகஸ்ட் 31) காணொளி காட்சி வாயிலாக தமிழகத்துக்கு 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் தொடக்க விழா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இதில் காணொளி வாயிலாகக் கலந்துகொண்ட பிரதமர் மோடி, புதிய ரயில் சேவையைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும் உத்தர பிரதேச மாநிலம் லக்னௌ - மீரட் இடையேயான வந்தே பாரத் ரயிலையும் தொடங்கி வைத்தார் மோடி.
சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்கப்படும். இந்த ரயில் அதிகாலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி, பிற்பகல் 1.50 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தை அடையும்.
பிறகு, பிற்பகல் 2.20 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் செவ்வாய்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்கப்படும். இந்த ரயில் அதிகாலை 5.15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி, பிற்பகல் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை அடையும்.
பிறகு, பிற்பகல் 1.30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி, இரவு 9.45 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில், திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சென்னை-திருநெல்வேலி, சென்னை-விஜயவாடா, சென்னை-கோவை, சென்னை-மைசூரு, கோவை-பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.