
அரசு அலுவலகங்களின் பேப்பர் உள்ளிட்ட பல்வேறு கழிவுப் பொருட்களை விற்பனை செய்த வகையில் ரூ. 2,364 கோடியை மத்திய அரசு வருமானமாக ஈட்டியதற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தால், இந்தியாவின் மிகப்பெரிய தூய்மை இயக்கம், சிறப்பு பிரச்சாரம் 4.0-ன் கீழ் முன்னெடுக்கப்பட்டது. மத்திய அரசு அலுவலகங்களில் இருக்கும் பேப்பர் உள்ளிட்ட கழிவுகளை விற்பனை செய்வது இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த வகையில் 2021 தொடங்கி கடந்த 3 வருடங்களில், மத்திய அரசு அலுவலகங்களில் கழிவுகளாக தேங்கியுள்ள பொருட்களை விற்பனை செய்த வகையில் மத்திய அரசுக்கு ரூ. 2,364 கோடி வருமானமாக கிடைத்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் இத்தகைய கழிவுகளை விற்பனை செய்தது மூலம் அரசுக்கு ரூ. 650 கோடி வருமானமாக கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.
இது குறித்து தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, `தூய்மை இயக்கம் வெற்றியடைய திறன்மிகு மேலாண்மை மற்றும் ஊக்கமான செயல் அணுகுமுறை வழிவகுத்துள்ளது. கூட்டு முயற்சி எவ்வாறு நிலையான முடிவுகளுக்கு வழிகாட்டும் என்பதை இது வெளிக்காட்டியுள்ளது. தூய்மை மற்றும் பொருளாதார ஆற்றலை மேம்படுத்தும் இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது’ என்றார்.
கழிவுப் பொருட்களை விற்பனை செய்ததால் சுமார் ரூ. 16 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாகவும், இதனால் 15,847 சதுர அடியிலான இடம் காலியாகியுள்ளதாகவும் கடந்த நவ.7-ல் தகவல் வெளியிட்டுள்ளது மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம்.