

பிஹாரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி, காட்டு ராஜ்ஜியத்தை அகற்றி நல்லரசாக்கிக் கொடுத்திருக்கிறோம் என்று பேசினார்.
பிஹார் மாநில சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 அன்றும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11 அன்றும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான இண்டியா (மகாகட்பந்தன்) கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகியவை பிரதானமாகக் களத்தில் உள்ளன. இந்நிலையில், பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தனது தேர்தல் பரப்புரையைப் பிரதமர் மோடி தொடங்கினார்.
அதன் ஒரு பகுதியாக பெகுசாராயில் மேற்கொண்ட பரப்புரையின்போது அவர் பேசியதாவது:-
பிஹாரில் காட்டு ராஜ்ஜியத்தை மாற்றி நல்ல அரசாக்கி இருக்கிறோம். இப்போது அதைச் செழிப்பானதாக மாற்றும் நேரம். பிஹாரின் செழிப்புக்கான உங்களது ஆசிகளைப் பெறவே நான் வந்திருக்கிறேன். இதே அக்டோபர் மாதம் 2005-ல் தான் நீங்கள் பிஹாரின் காட்டு ராஜ்ஜியத்தை நிராகரித்து நல்ல அரசைத் தேர்ந்தெடுத்தீர்கள். உங்களது வாக்கின் சக்தி பிஹாரின் செழுமையை நிர்ணயிக்கும் திறன் பெற்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் ஆர்ஜேடி எந்தத் தேர்தலையும் வெல்லவில்லை. ஆனால் இன்னும் அராஜகத்துடன் இருக்கிறது. அதனால்தான் அவர்கள் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியியைக் கூட்டணியை விட்டு நீக்கினார்கள். காங்கிரஸ் 35 ஆண்டுகளாக ஆர்ஜேடியைப் பின்பற்றி வருகிறது. பிஹாரின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பமான ஆர்ஜேடி குடும்பத்தைப் பாருங்கள், பெரும்பாலான உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு ஜாமினில் வெளியே வருகிறார்கள். மறுபுறம், காங்கிரஸும் நாட்டின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பம். இந்தக் குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்களும் ஜாமினில் வெளியே உள்ளனர். பிஹார் மக்கள் இவர்களை நம்பப்போவதில்லை” என்று கூறினார்.
முன்னதாக சமஸ்திபூரில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:-
“ராஷ்டிரிய ஜனதா தளமும் காங்கிரஸும் தங்கள் சொந்த குடும்பங்களின் அரசியல் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றன. அதனால்தான் இன்று பிஹார் இளைஞர்களுக்குப் பொய் கூறுவதில் சாதனை படைத்து வருகிறார்கள். ஆர்ஜேடி போன்ற ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் இடத்தில் சட்டம் ஒழுங்கு இருக்க முடியாது. ஆர்ஜேடியின் தவறான ஆட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தாய்மார்களும், சகோதரிகளும்தான். அவர்கள் ஆட்சியில் காவல் நிலையங்களின் கதவுகள் பிற்படுத்தப்பட்டோருக்கு உதவாமல் மூடப்பட்டன” என்று பேசினார்.
PM Modi kicks off Bihar poll campaign, claims to have transformed 'jungle raj' into good governance.