2 நாட்கள் அரசு முறைப்பயணமாக சிங்கப்பூருக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டுப் பிரதமர் வாங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையத்தை அமைக்கும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது.
நேற்று (செப்.09) புரூனையில் 2 நாள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு சிங்கப்பூருக்குச் சென்றார் பிரதமர் மோடி. சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் அந்நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம் பிரதமர் மோடியை வரவேற்றார்.
இதை அடுத்து விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர் சிங்கப்பூர் வாழ் இந்திய வம்சாவளி மக்கள். இந்த வரவேற்பில் `டோல்’ இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார் மோடி. மேலும் இந்தப் பயணம் குறித்து, `இந்தியா-சிங்கப்பூர் நட்புறவை மேம்படுத்தும் பல்வேறு சந்திப்புகளை எதிர்நோக்கியுள்ளேன்’ என்று தன் எக்ஸ் வலைதள கணக்கில் பதிவிட்டார் மோடி.
இந்நிலையில் இன்று (செப்.05) காலை பிரதமர் மோடியும், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்கும் அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து இருதரப்பு அரசு அதிகாரிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில், `இந்தியாவில் சுமார் 160 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீட்டை மேற்கொண்டு இந்தியாவின் முன்னணி பொருளாதாரக் கூட்டாளியாக உள்ளது சிங்கப்பூர். இந்தியாவின் விரைவான மற்றும் நீடித்த வளர்ச்சி, முதலீட்டுக்கான பல்வேறு வாய்ப்புகளை சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது’ என்றார் பிரதமர் மோடி.
இதைத் தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்களுக்கு முன்பு திருவள்ளுவர் கலாச்சார மையத்தை சிங்கப்பூரில் அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் திறன் மேம்பாடு, சுகாதாரம், மின்னணு தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொள்ளும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.