
உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதி அமைந்துள்ளது. இந்த நதியின் குறுக்கே செனாப் ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. பொறியியல் துறையின் அற்புதமான, உலகின் உயரமான பாலம் இது. இந்த ரயில் பாலம் ரூ. 1,400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 27,000 டன்களைக் கொண்ட இரும்புகளைக் கொண்டு செனாப் பாலம் கட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கங்களைத் தாங்கும் தன்மைகொண்ட இந்த பாலம், 120 ஆண்டுகளுக்குத் தாக்குப்பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
இப்பாலம் 1,315 மீ. நீளமும் 359 மீ. உயரமும் கொண்டுள்ளது. புகழ்பெற்ற பாரீஸ் ஈபிள் கோபுரத்தை விடவும் இது 35 மீ. உயரமானது. கத்ரா - ஸ்ரீநகர் வழித்தடத்துக்கான வந்தே பாரத் ரயில் இப்பாலத்தின் மீது முதலில் செல்லவுள்ளது. கத்ராவிலிருந்து ஸ்ரீநகரை இனிமேல் 3 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி இப்பாலத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டுக்கு அர்ப்பணித்தபோது, ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஓமர் அப்துல்லா மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உடனிருந்தார்கள். மூவர்ணக் கொடியை அசைத்து செனாப் பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, ரயிலில் பயணத்தையும் மேற்கொண்டார்.