புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்!

தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களின் தேவைக்கு ஏற்றவாறு பிரத்யேக திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, முன்னுரிமையின் அடிப்படையில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்!
1 min read

தமிழகத்தில் 9 ரயில் நிலையங்கள் உள்பட அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22) திறந்து வைத்தார்.

மத்திய ரயில்வே அமைச்சகத்தால் கடந்த 2023-ல் அமிரித் பாரத் திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள சுமார் 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்துப் பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் மின் தூக்கிகள், நடை மேம்பாலங்கள், நகரும் படிக்கட்டுகள், பயணிகளுக்கான காத்திருப்பு அறைகள், பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள், சிசிவிடி கேமரா, மின்னணு தகவல் பலகைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களின் தேவைக்கு ஏற்றவாறு பிரத்யேக திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, முன்னுரிமையின் அடிப்படையில் படிப்படியாக மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட முதல் ரயில் நிலையமான காந்திநகர் கடந்த 2021-ல் ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் அதிநவீன வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 103 புனரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை, ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் இருந்தபடி காணொளி வாயிலாக பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார்.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த போளூர், திருவண்ணாமலை, சிதம்பரம், சாமல்பட்டி, பரங்கிமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருதாச்சலம் மற்றும் குழித்துறை ஆகிய 9 ரயில் நிலையங்களும் அடக்கம். புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களில், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 19 ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in