
ஆனந்த் அம்பானிக்குச் சொந்தமான விலங்குகளுக்கான பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று (மார்ச் 4) திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக குஜராத் மாநிலத்திற்குச் சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதை ஒட்டி, ஆசிய சிங்கங்களின் ஒரே இருப்பிடமான கிர் தேசியப் பூங்காவில் அவர் பயணம் மேற்கொண்ட காணொளியும், புகைப்படங்களும் அண்மையில் வெளியாகின.
இந்நிலையில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானிக்குச் சொந்தமான, விலங்குகளுக்கான பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை அவர் திறந்து வைத்தார். ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஜாம்நகர் சுத்தீகரிப்பு மையத்தில் வந்தாரா அமைக்கப்பட்டுள்ளது.
3000 ஏக்கர் பரப்பளவில் விலங்குகளுக்கான எம்.ஆர்.ஐ., சிடி ஸ்கேன் மையங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள வந்தாராவில் ஏறத்தாழ 2,000 வகையிலான 1.5 லட்ச விலங்குகள் உள்ளன. யானைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகமான மருத்துவமனைகூட வந்தாராவில் உள்ளது.
இவ்வாறு விலங்குகளுக்காக வந்தாராவில் அமைக்கப்பட்ட பல்வேறு வசதிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, விலங்குகளுக்கு உணவளித்து, அவற்றுடன் நேரத்தை செலவிட்டார். இந்த நிகழ்வின்போது முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, மகன் ஆனந்த அம்பானி, அவரது மனைவி ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் உடனிருந்தார்கள்.