
இன்று (செப்.09) காலை தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் ஷேக் காலித் பின் முஹமத் ஸயீத் அல் நஹ்யானை வரவேற்றார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் மோடியின் அழைப்பின் பெயரில் செப் 09, 10 என இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் ஐக்கிய அரபு அமீரக இளவரசர் அல் நஹ்யான். இன்று காலை விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்திறங்கிய அல் நஹ்யானை விமான நிலையத்தில் வரவேற்றார் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்.
இதைத் தொடர்ந்து தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இளவரசர் அல் நஹ்யானை ஆரத்தழுவி வரவேற்றார் பிரதமர் நரேந்திர மோடி. இரு தலைவர்களும் ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
முதல்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அல் நஹ்யான், இந்தப் பயணத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்துப் பேசுகிறார். பிறகு மகாத்மா காந்தியின் நினைவிடமான தில்லி ராஜ்காட்டில் மரியாதை செலுத்த இருக்கிறார். நாளை மும்பையில் நடக்கும் தொழில் அமர்வில் கலந்துகொள்கிறார் அல் நஹ்யான். இதில் இரு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கலந்துகொள்கின்றனர்.
கடந்த பிப்ரவரியில் அரசு முறைப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று அதிபர் ஷேக் முஹமத் பின் ஸயீத் அல் நஹ்யானைச் சந்தித்தார் பிரதமர் மோடி. இந்த சந்திப்பில் இரு அரசுகளும் 8 ஒப்பந்தங்களை மேற்கொண்டன. மேலும் அந்தப் பயணத்தின்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்துக் கோவிலைத் திறந்து வைத்தார் மோடி.