2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று காலை (செப்.03) தலைநகர் தில்லியில் இருந்து புரூனே நாட்டுக் கிளம்பினார் பிரதமர் மோடி.
இன்று புரூனேவைச் சென்றடையும் பிரதமர் மோடி, நாளை (செப்.04) புரூனேவில் இருந்து கிளம்பி சிங்கப்பூருக்குச் செல்கிறார். செப்.05-ல் சிங்கப்பூரில் இருந்து கிளம்பி இந்தியாவுக்குத் திரும்புகிறார் மோடி. இந்தப் பயணம் தொடர்பாக பிரதமர் மோடியின் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு:
`அடுத்த இரண்டு நாட்கள் புரூனே மற்றும் சிங்கப்பூருக்குச் செல்கிறேன். இரு நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஒத்துழைப்புகளின் வழியாக, அந்நாடுகளுடனான இந்திய அரசு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்
இந்தியா-புருனே நாடுகளுக்கு இடையே ராஜதந்திர முறையிலான உறவுகள் 40 வருடங்களை நிறைவு செய்கின்றன. புருனேவின் மன்னர் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா அவர்களைச் சந்திக்கிறேன். சிங்கப்பூரில் குடியரசுத் தலைவர் தர்மன் ஷண்முகரத்னம் மற்றும் பிரதமர் லாரன்ஸ் வாங் ஆகியோருடன் உரையாடுகிறேன்’ என்றார்.
1984-ல் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்றது புரூனே. அதற்குப் பிறகு இது நாள் வரை எந்த ஒரு இந்தியப் பிரதமரும் புரூனே நாட்டுக்குச் சென்றது கிடையாது. எனவே இந்தப் பயணத்தின் மூலம் புரூனே நாட்டுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார் பிரதமர் மோடி.