இந்தியருக்கு கார்டினல் பதவி: பிரதமர் மோடி பெருமிதம்!
கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் கூவக்காட்டிற்கு கார்டினல் பதவி வழங்கப்பட்டது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விஷயம் என பதிவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தின் செத்திபுழா பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான ஜார்க் ஜேக்கப் கூவக்காடு. 2004-ல் சங்கனச்சேரியில் கிறிஸ்துவப் பாதிரியாரான ஜார்க் கூவக்காடு, கடந்த 2006-ல் வாட்டிகன் நகரில் உள்ள போப் தலைமையிலான ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் பணியில் இணைந்தார்.
கத்தோலிக்க தேவாலயத்தின் சார்பில் அல்கேரியா, தென் கொரியா, ஈரான், வெனிசுலா, கோஸ்டா ரிகா உள்ள நாடுகளில் பணியாற்றியுள்ளார் ஜார்க் கூவக்காடு. இதைத் தொடர்ந்து கடந்த 2020-ல் இருந்து போப் பிரான்சிஸின் அயலக பயண திட்டங்களை அவர் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், ஜார்க் கூவக்காட்டுக்கு கார்டினலாக பதவி உயர்வு அளித்துள்ளார் போப் பிரான்சிஸ். வாடிகன் நகரில் நடந்த இதற்கான விழாவில், மத்திய சிறுபான்மையினர் நல இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் தலைமையிலான இந்திய அரசு குழுவினர் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`இந்தியாவுக்கு மகிழ்ச்சியான மற்றும் பெருமையான விஷயம். போப் பிரான்சிஸால் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் கார்டினலாக ஜார்க் ஜேக்கப் கூவக்காடு நியமிக்கப்பட்டுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். ஏசு கிறிஸ்துவை தீவிரமாக பின்பற்றிவரும் ஜார்ஜ் கார்டினல் கூவக்காடு மனிதநேய சேவையில் தன் வாழ்க்கை அர்ப்பணித்துள்ளார். அவரது வருங்கால பணிகளுக்கு என் வாழ்த்துகள்’ என்றார்.