எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய உலக நாடுகளிலிருந்து இறக்குமதி: பிரதமர் மோடி விளக்கம் | Iran War | PM Modi |2

மேற்கு ஆசியாவில் தொடர்புடைய அனைத்து தலைவர்களுடனும் நான் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளேன்....
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடிANI
2 min read

இந்தியாவின் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கமளித்தார்.

மத்திய கிழக்கில் தொடரும் போர் சூழல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

“மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மிகுந்த கவலையளிக்கிறது. கடந்த 2-3 வாரங்களில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி ஆகியோர் நாடாளுமன்றத்தில் இந்த நிலைமை குறித்த விவரங்களைத் தெரிவித்துள்ளனர். இந்த மோதல் 3 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

ஒருமித்த குரல் அவசியம்

இந்தியாவுக்கு போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளுடனும், போரால் பாதிக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகளுடனும் விரிவான வர்த்தக உறவுகள் உள்ளன. நமது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளில் பெரும்பகுதிக்கு இப்பகுதிகள் அவசியமாகின்றன. மேலும், கிட்டத்தட்ட 1 கோடி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வசித்து பணியாற்றி வருகின்றனர். அங்கு இந்திய வணிகக் கப்பல்கள் இயங்குகின்றன. இந்தியக் குழுவினரின் எண்ணிக்கையும் மிக அதிகம். இத்தகைய பல்வேறு காரணங்களால், இந்தியாவின் கவலைகள் இயல்பாகவே அதிகமாக உள்ளன. எனவே, இந்த நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்திலிருந்து உலகிற்கு ஒருமித்த குரலும் ஒருமனப்பாட்டு செய்தியும் செல்ல வேண்டியது அவசியமாகும்.

பெட்ரோல், டீசல் விநியோகத்தில் கவனம்

போர் தொடங்கியதிலிருந்து, 3,75,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். ஈரானிலிருந்து இதுவரை சுமார் 1,000 இந்தியர்கள் பாதுகாப்பாக திரும்பியுள்ளனர்; இதில் 700-க்கும் மேற்பட்டோர் மருத்துவ மாணவர்கள். வளைகுடா நாடுகளின் பள்ளிகளில் சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு, உரங்கள் மற்றும் பல அத்தியாவசியப் பொருள்கள் வருகின்றன. கப்பல்களின் இயக்கம் சவாலாக உள்ள போதிலும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்படாமல் இருக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. நாம் 27 நாடுகளில் இருந்து எரிபொருள்களை இறக்குமதி செய்து வந்தோம். ஆனால் இன்று 41 நாடுகளில் இருந்து எரிபொருள்களை இறக்குமதி செய்கிறோம். கடந்த பத்தாண்டுகளில், கச்சா எண்ணெய் சேமிப்பிற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம். அதனால் நம்மிடம் இப்போது பெரியளவில் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது.

மின்சக்தி உற்பத்தி அதிகரிப்பு

கடந்த 11 ஆண்டுகளில், நாட்டின் சூரிய மின்சக்தி திறன் சுமார் 3 கிகாவாட்டிலிருந்து 140 கிகாவாட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஓர் ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் கூரை சூரிய பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. கோவர்தன் யோஜனாவின் கீழ் 200 சுருக்கப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகள் நாட்டில் செயல்படத் தொடங்கியுள்ளன. நாட்டில் அணு மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்க ஷாந்தி சட்டத்தின் மூலம் மேலும் தயார்நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சிறு நீர்மின்சக்தி மேம்பாட்டுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் 1,500 மெகாவாட் புதிய நீர்மின்சக்தி திறன் சேர்க்கப்படும்.

ராஜதந்திர பேச்சுவார்த்தையே தீர்வு

இந்தியாவின் ராஜதந்திர பங்கு தெளிவாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்த மோதல் குறித்து நாம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளோம். மேற்கு ஆசியாவில் தொடர்புடைய அனைத்து தலைவர்களுடனும் நான் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளேன். அனைவரையும் பதற்றத்தை குறைக்கவும், மோதலை முடிவுக்குக் கொண்டுவரவும் வலியுறுத்தியுள்ளேன். குடியிருப்புப் பகுதிகள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களும், ஹார்முஸ் நீரிணை போன்ற சர்வதேச நீர்வழிகளைத் தடுப்பதும் ஏற்கத்தக்கவை அல்ல. ராஜதந்திர பேச்சுவார்த்தையே இப்பிரச்னைக்கு தீர்வு என மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்றார்.

Summary

Prime Minister Modi explained in Parliament that India's fuel needs are being met by imports from many countries.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in