பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக இன்று போலந்து புறப்பட்டுச் சென்றார்.
போலந்துடனான உறவு 70 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், பிரதமரின் இந்தப் பயணம் அமைகிறது. 45 ஆண்டுகளில் போலந்து செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
பயணம் பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாவது:
"மத்திய ஐரோப்பாவில் மிக முக்கியப் பொருளாதார கூட்டாளி நாடாக போலந்து உள்ளது. ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையில் இரு நாடுகளும் உறுதிகொண்டிருப்பது நம் உறவை மேலும் வலுப்படுத்துகிறது. போலந்துடனான உறவை மேம்படுத்த நண்பர் பிரதமர் டொனால்ட் டஸ்க் மற்றும் அதிபர் ஆண்ட்ரேஜ் டுடாவைச் சந்திப்பதை எதிர்நோக்கியிருக்கிறேன். துடிப்பான இந்திய மக்களைச் சந்தித்து, அவர்களுடனும் உரையாடவிருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
போலந்து பயணத்தைத் தொடர்ந்து, உக்ரைனுக்கும் பிரதமர் மோடி பயணிக்கிறார்.
உக்ரைன் பயணம் பற்றி பிரதமர் மோடி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் அழைப்பை ஏற்று உக்ரைன் செல்கிறேன். முன்பு நடைபெற்ற உரையாடலை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்வதற்கான வாய்ப்பாகவும், இந்தியா - உக்ரைன் உறவை வலுப்படுத்தவும் இந்தப் பயணம் அமையவிருக்கிறது. நடைபெற்று வரும் உக்ரைன் போருக்கு அமைதி வழியில் தீர்வு காண்பது குறித்து கருத்துகள் பகிரப்படவுள்ளன. நண்பராகவும், கூட்டாளி நாடாகவும் அங்கு அமைதியும் நிலைத்தன்மையும் விரைவில் திரும்பும் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுடனான தூதரக உறவு தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், அங்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. உக்ரைன் தலைநகர் கீவில் 7 மணி நேரம் இருக்கவுள்ளார். போலந்திலிருந்து ரயில் மூலம் உக்ரைன் பயணிக்கிறார் பிரதமர் மோடி.