அரசுமுறை சுற்றுப்பயணமாக 3 நாடுகளுக்குக் கிளம்பிய பிரதமர் மோடி!

அரசுமுறை சுற்றுப்பயணமாக 3 நாடுகளுக்குக் கிளம்பிய பிரதமர் மோடி!

கடந்த 50 வருடங்களில் குயானா நாட்டுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார் மோடி.
Published on

தலைநகர் தில்லியில் இருந்து 5 நாள் அரசுமுறைப் பயணமாக நைஜீரியா, பிரேசில், குயானா நாடுகளுக்கு இன்று (நவ.16) கிளம்பிச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தப் பயணத்தில், அதிபர் போலா அஹமது தினுபுவின் அழைப்பின் பெயரில், முதலில் நைஜீரியாவுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி. இதன் மூலம் 17 வருடங்களுக்குப் பிறகு நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார் மோடி. இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்தித்துப் பேசவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்குச் செல்லும் பிரதமர் மோடி, வரும் நவ.19-ல் அங்கு நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த உச்சி மாநாட்டில் ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறுவதை எதிர்பார்ப்பதாக தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. கடந்த வருடம் ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற்றது.

இதை அடுத்து, அதிபர் மொஹமத் இர்பான் அலியின் அழைப்பின் பேரில் குயானா நாட்டுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி. இதன் மூலம் கடந்த 50 வருடங்களில் குயானா நாட்டுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார் மோடி. குயானாவில் நடைபெறும் இந்தியா-கரீபியன் நாடுகள் கூட்டமைப்பின் 2-வது உச்சி மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார்.

குயானாவில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் வைத்து, டொமினிகா நாட்டின் அதிபர் சில்வானி பர்டன், அந்நாட்டின் மிக உயரிய `டொமினிகா அவார்டு ஆஃப் ஹானர்’ விருதை பிரதமர் மோடிக்கு வழங்குகிறார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசிகளை வழங்கி உதவியதற்காகவும், சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் டொமினிகா நாட்டிற்கு உதவி செய்ததற்காகவும் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in