
பிரிட்டன் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு 4 நாள்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக தலைநகர் தில்லியில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 23) புறப்பட்டுச் சென்றார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு இடையே மேற்கொள்ளும் அரசு முறை சுற்றுப்பயணம் தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் பிரதமர் மோடி கூறியதாவது,
`கடந்த சில ஆண்டுகளாக நம்முடனான கூட்டணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்த பிரிட்டன் நாட்டிற்குப் புறப்படுகிறேன். பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடனான எனது பேச்சுவார்த்தைகளையும், மாட்சிமை பொருந்திய மன்னர் மூன்றாம் சார்லஸுடனான எனது சந்திப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நாளை மறுநாள் ஜூலை 25 அன்று, அதிபர் மொஹமத் முய்சுவின் அழைப்பின்பேரில் மாலத்தீவுக்குச் செல்கிறேன். மாலத்தீவின் 60-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன். இந்த ஆண்டு இந்தியா-மாலத்தீவு ராஜதந்திர உறவுகளின் 60-வது ஆண்டை நாங்கள் கொண்டாடுகிறோம்.
பல்வேறு துறைகளில் அதிபர் முய்சுவுடனான பேச்சுவார்த்தைகள் இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக உத்வேகம் அளிக்கும்’ என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிரிட்டன் மற்றும் மாலத்தீவு பயணங்களில், அந்நாடுகளுடனான வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக, அவரது லண்டன் பயணத்தின் முக்கிய விளைவாக இந்தியா-பிரிட்டன் நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும்போது, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகும் 99 சதவீத பொருள்களுக்கு இறக்குமதி வரி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.