மூன்று நாள் அரசு முறைப் பயணமாக தலைநகர் தில்லியில் இருந்து இன்று (செப்.21) காலை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.
செப்.21-ல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சொந்த ஊரான டெலாவேர் மாகாணத்தின் வில்மிங்டனில் நடக்கும், 6-வது குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. இதில் அமெரிக்க அதிபர், இந்தியப் பிரதமருடன், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளின் பிரதமர்களும் கலந்துகொள்கின்றனர்.
இந்த உச்சி மாநாட்டில் இந்திய-பசிஃபிக் பிராந்தியத்தில் கூட்டாக மேற்கொள்ள வேண்டிய ஒத்துழைப்புகள் குறித்தும், இந்தப் பிராந்தியத்தின் அமைதி, செழிப்பு, முன்னேற்றம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் 4 நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இந்தப் பயணத்தில், அமெரிக்க வாழ் இந்தியர்களையும், அமெரிக்க தொழில்துறையைச் சார்ந்தவர்களையும் சந்திக்கிறார் பிரதமர் மோடி. அத்துடன் நியூயார்க் நகரத்தில் ஐநா பொதுசபையின், `வருங்காலத்தின் உச்சிமாநாட்டில்’ (summit of the future) பங்கேற்று உரையாடுகிறார் மோடி.
அமெரிக்க பயணம் தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக்கணக்கில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, `அமெரிக்க பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். அதிபர் பைடன் ஏற்பாடு செய்யும் குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்கிறேன். தனிப்பட்ட முறையிலும் அதிபர் பைடனைச் சந்தித்து உரையாடவுள்ளேன். அமெரிக்க வாழ் இந்தியர்களைச் சந்திக்க மிக ஆர்வமாக உள்ளேன்’ என்றார்.