
பயங்கரவாதத்திற்கு எதிராக சில நாடுகள் இரட்டை நிலைப்பாடு மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி ஜப்பான் மற்றும் சீனாவுக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டார். கடந்த 31-ம் தேதி ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, இந்தியாவும், ஜப்பானும் இணைந்து இந்த நூற்றாண்டை நிலைத்தன்மை உடையாதாகவும் வளர்ச்சி அடைந்ததாகவும் செழிப்பானதாகவும் உருவாக்கும் என்று பேசினார். அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், செப்டம்பர் 1-ம் தேதி (இன்று) சீனாவின் தியான்சின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டின் தீர்மானங்களில் ஒன்றாகக் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, ”பயங்கரவாதத்திற்கு எதிரான ஒற்றுமையான நிலைப்பாட்டை உலக நாடுகள் எடுக்க வேண்டும். பெஹல்காம் தாக்குதலின்போது பயங்கரவாதத்தின் அசிங்கமான முகத்தை இந்தியா கண்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான மனப்பான்மையில் சில நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை மேற்கொண்டு வருவது மாற வேண்டும்” என்று பேசினார்.
ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில், உக்ரைன் முன்னெடுத்து வரும் போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியா வரவேற்பு அளிப்பதாகத் தெரிவித்தார். உக்ரைனும் ரஷ்யாவும் விரைவில் போர் நிறுத்தத்தை நோக்கி நகர வேண்டும் என்று வலியுறுத்தினார். மாநாடு முடிந்ததும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே வாகனத்தில் பயனித்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.
அண்மையில் உக்ரைன், சீனா உள்ளிட்ட பல நாடுகளின் மீது அமெரிக்கா வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியது. இந்நிலையில், இன்று ரஷியா, இந்தியா மற்றும் சீனாவின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.