
கோவா கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளியைக் கொண்டாடிய பிரதமர் மோடி, முப்படைகளின் ஒத்துழைப்பால் பாகிஸ்தான் விரைவில் சரணடைந்தது என்று பேசினார்.
ஆண்டுதோறும் பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோவா மாநிலத்தில் கடற்படையினருடன் தீபாவளி கொண்டாடினார். நேற்று (அக்.19) கோவா கடற்பகுதி அருகே நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலுக்குச் சென்றார். அங்கு கடற்படை வீரர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதன் பின் இன்று வீரர்கள் இடையே பிரதமர் நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
“நான் இந்த புனிதமான தீபாவளி பண்டிகையைக் கடற்படையின் துணிச்சலான வீரர்களுடன் கொண்டாடுவது எனக்கு பெரும் பாக்கியமாக உள்ளது. இன்று, ஒருபுறம் எல்லையற்ற கடல், எல்லையற்ற வானம், மறுபுறம் எல்லையற்ற சக்தியை உள்ளடக்கிய இந்த பிரமாண்டமான ஐஎன்எஸ் விக்ராந்த் உள்ளது. கடல்நீரில் சூரியக் கதிர்களின் ஒளி, வீரர்களால் ஏற்றப்பட்ட தீபாவளி விளக்குகளைப் போல உள்ளது.
நேற்று இரவு ஐஎன்எஸ் விக்ராந்தில் கழித்த நேரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நேற்று நீங்கள் தேசபக்தி பாடல்களைப் பாடினீர்கள். ஆபரேஷன் சிந்தூர் பற்றிய உங்கள் பாடல்களில் விவரித்த விதத்தில் உங்களிடம் இருந்த அபரிமிதமான ஆற்றலையும், உற்சாகத்தையும் நான் கண்டேன். ஒரு போர்க்களத்தில் நிற்கும் வீரனின் உணர்வை எந்த வார்த்தைகளாலும் முழுமையாக வெளிப்படுத்த முடியாது.
கடலின் ஆழமான இரவும், இன்று காலை உதயமான சூரிய ஒளியும் எனது தீபாவளியை பல வகைகளில் சிறப்பாக்கியுள்ளன. ஐஎன்எஸ் விக்ராந்தின் தளங்களிலிருந்து, நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை அனுப்புகிறேன். மிக முக்கியமாக, உங்கள் குடும்பங்களுக்கு மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்...
தீபாவளி பண்டிகையின் போது, எல்லோரும் தங்கள் குடும்பத்துடன் அதைக் கொண்டாட விரும்புகிறார்கள். நானும் எனது குடும்ப உறுப்பினர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்கு பழகியவன். அதனால்தான், நான் உங்களை எனது குடும்பமாக கருதி, உங்களுடன் தீபாவளியைக் கொண்டாட வந்துள்ளேன். இங்கே நானும் எனது குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுகிறேன். இந்த தீபாவளி எனக்கு உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது...
ஐஎன்எஸ் விக்ராந்த் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டபோது, நான் கூறியது நினைவுக்கு வருகிறது. விக்ராந்த் மிகப் பெரியது, பிரமாண்டமானது, மற்றும் மகத்தானது. விக்ராந்த் தனித்துவமானது மற்றும் சிறப்பு வாய்ந்தது. இது வெறும் போர்க்கப்பல் மட்டுமல்ல. இது 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, திறன், மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சான்றாகும். சுயாதீன ஐஎன்எஸ் விக்ராந்தை இந்தியா பெற்ற அன்று, இந்திய கடற்படை காலனிய ஆதிக்கத்தின் முக்கிய சின்னத்தை நீக்கியது. சத்ரபதி சிவாஜி மகாராஜாவால் ஈர்க்கப்பட்டு, நமது கடற்படை புதிய கொடியை ஏற்றுக்கொண்டது.
சில மாதங்களுக்கு முன்பு, விக்ராந்த் என்ற பெயர் மட்டுமே பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதை நாம் கண்டோம். இதன் வலிமை அப்படிப்பட்டது. போர் தொடங்குவதற்கு முன்பே எதிரியின் தைரியத்தை உடைக்கும் ஒரு பெயர்தான் ஐஎன்எஸ் விக்ராந்தின் சக்தி. இந்தச் சந்தர்ப்பத்தில், நான் குறிப்பாக நமது ஆயுதப்படைகளுக்கு வீரவணக்கம் செலுத்த விரும்புகிறேன்.
இந்திய கடற்படையால் உருவாக்கப்பட்ட பயம், இந்திய விமானப்படையின் அசாதாரண திறமை, இந்திய ராணுவத்தின் துணிச்சல், மற்றும் முப்படைகளின் அபரிமிதமான ஒருங்கிணைப்பு ஆகியவை சேர்ந்துதான் ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானை விரைவாகச் சரணடைய வைத்தன. நமது ஆயுதப்படைகள் வலிமையாக இருக்க சுயசார்பு மிகவும் அவசியம் ஆகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நமது ஆயுதப்படைகள் சுயசார்புக் கொள்கையை நோக்கி விரைவாகப் பயணித்திருப்பது பெருமையளிக்கிறது.
உலகின் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கியமான இடத்தில் இந்தியா இருக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. கடந்த 10 ஆண்டுகளில் நமது பாதுகாப்பு ஏற்றுமதிகள் 30% அதிகரித்துள்ளன. இந்திய கடற்படை உலகளாவிய ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று, உலகின் 66% எண்ணெய் விநியோகமும், 50% உலகளாவிய கப்பல் சரக்கு போக்குவரத்தும் இந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்கின்றன. இந்த வழித்தடங்களைப் பாதுகாப்பதில், இந்திய கடற்படை இந்தியக் கடல்களின் காவலராகப் பணியாற்றுகிறது.” என்றார்.