

பிஹாரில் நல்லாட்சிக்கும் காட்டாட்சிக்குமான வித்தியாசத்தை முதற்கட்ட வாக்குப்பதிவு காட்டியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிஹார் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று (நவ. 6) வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அதில் ஏறத்தாள 65% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக ஔரங்காபாத் பகுதியில் பாஜக - ஜேடியு இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
“பிஹாரில் நல்லாட்சிக்கும் காட்டாட்சிக்குமான வித்தியாசத்தை முதற்கட்ட வாக்குப்பதிவு காட்டியுள்ளது. நேற்று (நவ. 6) பிஹாரின் அனைத்து தரப்பு மக்களும் எந்தவிதத் தடையுமின்றி வாக்களித்தார்கள். ஆனால் இதே பிஹாரில் காட்டட்சி நிலவியபோது ஒரு காலம் இருந்தது. அப்போது வாக்குச்சாவடிகள் திருடப்பட்டன. வாக்குப்பதிவு நடந்த நாள்களில் துப்பாக்கிச் சூடுகள் நடந்தன. வெடி குண்டுகள் வெடித்தன. பிற்படுத்தபட்டோரின் குரல்கள் நசுக்கப்பட்டன. அந்தக் காட்டாட்சிக் காரர்கள் இப்போதும் அதையே செய்ய நினைக்கிறார்கள். ஆனால் முதற்கட்ட தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் தேர்தல் ஆணையத்தை நான் பாராட்டுகிறேன்.
பிஹாரில் ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று நாங்கள் சொல்லும்போது இளைஞர்கள் எங்களை நம்புகிறார்கள். கடந்த சில ஆண்டுகளிலேயே லட்சக் கணக்கான புது வேலை வாய்ப்புகள் பிஹாரில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நேர்மையான வழியில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆர்ஜேடி - காங்கிரஸ் கட்சிகளின் தரவுகளை எடுத்துப் பார்த்தால் வேலைக்காக பிஹார் இளைஞர்களின் நிலங்களை அவர்கள் பறித்துள்ளார்கள். அவர்கள் இப்போது ஜாமினில் வெளிவந்திருக்கிறார்கள். விசாரணை அமைப்புகள் அவர்களிடம் விசாரணை நடத்துகின்றன.
குறிப்பாக நக்சல் மற்றும் மாவோயிஸ பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டது. இங்கு இருட்டுவதற்கு முன்பே சாலைகள் அமைதி அடைந்த நாள்களை நம்மால் மறக்கமுடியாது. நக்சல் பிடியில் பேருந்துகள் கூட பாதுகாப்பாக நகரக் கப்பம் கட்ட வேண்டி இருந்தது. இருசக்கர வாகனங்களில் பயணிப்பதைப் பற்றி யாரும் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாமல் இருந்தது. ஆனால் எப்போது அந்தக் காட்டாட்சி முடிவுக்கு வந்ததோ, அப்போதே நிதிஷ் குமாரின் ஆட்சியில் இந்த வெறிச்செயல்கள் நிறுத்தப்பட்டன. நான் தில்லிக்கு வந்தபிறகு நாட்டில் நக்சல் மற்றும் மாவோயிஸ பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன். இப்போது பிஹார் அந்த அச்சுறுத்தல்களின் பயமின்றி இருக்கிறது. இதற்கு பிஹாரின் இரட்டை இன்ஜின் அரசாங்கம்தான் காரணம்.
அதேபோல் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று நாங்கள் பாதுகாப்புப் படையினருக்கு வாக்குறுதி அளித்தோம். 11 ஆண்டுகளுக்கு முன் இதே நவம்பர் 11 அன்று அதை நிறைவேற்றினோம். ஆனால் இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு அவர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றியது. ரூ. 500 கோடியைக் காட்டி இதுதான் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்று சொன்னது. ஆனால் இன்று ஓய்வுபெற்ற ராணுவ குடும்பங்களுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் ஆர்ஜேடியினருக்கு ஒரு லட்சம் கோடி என்று எழுதக்கூடத் தெரியாது” என்றார்.
Prime Minister Modi has stated that the first phase of polling in Bihar has shown the difference between good governance and jungle raj.