மக்களைப் பாதுகாப்பதில் முந்தைய அரசு சோம்பேறித்தனமாக இருந்தது: பிரதமர் மோடி | PM Modi |

கோவாவில் நிறுவப்பட்ட ராமரின் 77 அடி வெண்கல சிலையைத் திறந்து வைத்தார்.....
மக்களைப் பாதுகாப்பதில் முந்தைய அரசு சோம்பேறித்தனமாக இருந்தது: பிரதமர் மோடி
மக்களைப் பாதுகாப்பதில் முந்தைய அரசு சோம்பேறித்தனமாக இருந்தது: பிரதமர் மோடி
2 min read

மக்களைப் பாதுகாப்பதில் முந்தைய அரசு சோம்பேறித்தனமாக இருந்தன. ஆனால் நமக்கு அமைதியை நிலைநாட்டவும் மக்களைப் பாதுகாக்கவும் தெரியும் என்று பிரதமர் மோடி பேசினார்.

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயிலில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற கீதை பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக உடுப்பிக்கு வந்த அவருக்கு சாலையின் இரு மருங்கிலும் இருந்த பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தார்கள். பின்னர் கோயிலுக்கு வந்த அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி, லட்ச காண்ட கீதபாராயண நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுவர்ண தீர்த்த மண்டபத்தைத் திறந்து வைத்தார். அப்போது ஸ்ரீபுட்டிகே மடத்தின் தலைவர் ஸ்ரீசுகுணேந்திரதீர்த்த சுவாமியைச் சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

“மூன்று நாட்களுக்கு முன்பு, கீதை பிறந்த குருஷேத்திரத்தின் புனித பூமியில் இருந்தேன். இன்று, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோரின் இந்த ஆசிர்வதிக்கப்பட்ட பூமிக்கு வருவது எனக்கு திருப்தியை அளிக்கிறது. இந்த வேளையில் ஒரு லட்சம் பேர் ஒன்றாக பகவத் கீதையின் ஸ்லோகங்களை உச்சரித்த போது, உலகம் எங்கும் உள்ள மக்கள் இந்தியாவின் ஆழ்ந்த ஆன்மீக பாரம்பரியத்தைக் கண்டார்கள். குஜராத்துக்கும் உடுப்பிக்கும் தொடர்பு உண்டு. பொது நலனுக்காக பாடுபடுமாறு கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற பகவத் கீதையின் செய்தியே நான் அறிமுகம் செய்த பல்வேறு திட்ட கொள்கைகளுக்கு அடிப்படையாகும்.

தில்லி செங்கோட்டையில் இருந்து சுதர்சன சக்கர இயக்கத்தை அறிவித்தேன். இந்த திட்டம் என்பது பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட நாட்டின் முக்கிய இடங்களை சுற்றி, எதிரிகளின் தாக்குதலில் இருந்து காக்கும் பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவது. எதிரிகள் அத்துமீறலில் ஈடுபட்டால் ஒரு எதிரி ஆக்கிரமிப்பைக் காட்டத் துணிந்தால் நமது சுதர்சன சக்கரம் அதை அழித்துவிடும்.

பகவத் கீதை அமைதி மற்றும் உண்மைக்காக பாடுபடவும் அராஜகம் செய்பவர்களை அழிக்க வேண்டியதன் அவசியத்தை நமக்குக் கற்பிக்கிறது. ஆப்பரேஷன் சிந்தூர் நடந்த போது, நமது உறுதிப்பாட்டை தேசம் பார்த்தது. பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த சகோதரர் மற்றும் சகோதரிகள் பாதிக்கப்பட்டனர். பயங்கரவாத தாக்குதலின் போது முந்தைய அரசுகள் சோம்பேறித்தனமாக அமர்ந்திருந்தன. நமக்கு இந்தியாவில் அமைதியை நிலைநாட்டவும் தெரியும், அதைப் பாதுகாக்கவும் தெரியும்” என்றார்.

இதைத் தொடர்ந்து கோவா சென்ற அவர், தெற்கு கோவாவின் கனகோனாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் நிறுவப்பட்ட ராமரின் 77 அடி வெண்கல சிலை, புனித பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்றது. இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Summary

Prime Minister Narendra Modi unveiled a 77-foot statue of Lord Ram made up of bronze at Shree Samsthan Gokarn Partagali Jeevottam Math.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in