
உலகளவில் நிலவும் ஸ்திரமின்மைக்கு மத்தியில், யோகா ஒரு சக்திவாய்ந்த கருவி என்றும், அது மனிதகுலம் சுவாசிக்கவும், சமநிலையைக் கண்டறியவும், மீண்டும் முழுமையடையவும் தேவையான ஒரு வழி என்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 21) பேசியுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, `சர்வே பவந்து சுகினா (அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்) என்ற சிந்தனையின்படி நாம் வாழ வேண்டும், ஏனெனில் இது அமைதியான சமூகத்திற்கு வழிவகுக்கும்.
துரதிர்ஷ்டவசமாக, இன்றைய உலகம் பரவலான வன்முறையையும் அமைதியின்மையையும் காண்கிறது. யோகா என்பது மனிதகுலம் சுவாசிக்கவும், சமநிலையைக் கண்டறியவும், அமைதியை மீண்டும் பெறவும் தேவையான ஒரு வழி’ என்றார்.
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், `தான் என்ற அகந்தையைக் கொன்று, நான் என்ற நிலையில் இருந்து நாம் என்ற நிலைக்கு யோகா நம்மை அழைத்துச் செல்கிறது’ என்று பிரதமர் மோடி கூறினார். மேலும், உலகளாவிய ஒற்றுமையை வளர்ப்பதற்கான சக்தியை யோகா எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் விளக்கமளித்தார்.
நடப்பாண்டின் சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளான `ஒரு பூமி, ஒரு ஆரோக்கியத்திற்கான யோகா’ என்பது குறித்து விளக்கிய பிரதமர் மோடி, `இந்த கருப்பொருள் ஒரு ஆழமான உண்மையை பிரதிபலிக்கிறது: பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்தின் ஆரோக்கியமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
மேலும், `ஆரம்பத்தில், நமது சொந்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் நன்கு கவனித்துக் கொள்ளக் கற்றுக்கொள்கிறோம். வலுவான தனிப்பட்ட ஒழுக்கத்தை யோக வளர்த்தெடுக்கிறது’ என்றும் அவர் கூறினார்.
`சிட்னி ஓபரா ஹவுஸ் அல்லது எவரெஸ்ட் மலை அல்லது கடலின் பரப்பளவு என எதுவாக இருந்தாலும், யோகா அனைவருக்குமானது என்பதுதான் செய்தி’ என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.