
உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலில் அமைக்கப்பட்டுள்ள புதிய நிலைக்குழுவுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 263-ன் கீழ் மாநிலங்களுக்கு இடையேயோன கவுன்சில் மத்திய அரசால் அமைக்கப்படும். மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னைகள் குறித்த ஆலோசனைகள், மாநிலங்களின் நலனுக்குத் தேவையான நடவடிக்கைகள் ஆகியவை குறித்த பரிந்துரைகளை வழங்குவது இந்த கவுன்சிலின் முக்கியப் பணியாகும்.
சர்க்காரியா ஆணையம் வழங்கிய பரிந்துரைப்படி இந்தியாவில் முதன்முறையாக 1990-ல் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்தக் கவுன்சிலின் உறுப்பினர்களாக பிரதமர், மாநில முதல்வர்கள், சட்டப்பேரவைகளுடன் கூடிய யூனியன் பிரதேச முதல்வர்கள், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் ஆட்சியாளர்கள், 6 மத்திய கேபினட் அமைச்சர்கள் ஆகியோர் இடம்பெறுவார்கள்.
இந்நிலையில், மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற பிறகு, முதல்முறையாக மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் புதிய நிலைக்குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலைக்குழுவில், மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சௌஹான், நிர்மலா சீதாராமன், ராஜீவ் ரஞ்சன் சிங், விரேந்திர குமார், சி.ஆர். பாட்டீல் ஆகியோரும், ஆந்திரா, அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, ஒடிஷா, உத்தர பிரதேச மாநிலங்களின் முதல்வர்களும் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
கவுன்சில் கூட்டத்தில் கருத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் குறித்த முதற்கட்ட ஒப்புதலை இந்த நிலைக்குழு அளிக்கும். அதன்பிறகே அவை கவுன்சிலால் பரிசீலிக்கப்படும். மேலும், கவுன்சில் வழங்கும் ஆலோசனைகள் செயல்படுத்தப்படுவதை இந்த நிலைக்குழு கண்காணிக்கும்.