லக்னௌ கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் டிரான்ஸ்போர்ட் நகர் உள்ளது. இங்கு நான்காண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மூன்றடுக்கு கட்டடம் ஒன்று உள்ளது. இதன் தரை தளத்தில் வாகனங்கள் பழுதுபார்க்கும் கடை, சேமிப்புக் கிடங்கு உள்ளன.
முதல் தளத்தில் மருத்துவ சேமிப்புக் கிடங்கு, இரண்டாவது தளத்தில் வெட்டுக் கருவிகள் சேமிப்புக் கிடங்கு அமைந்துள்ளன. இந்தக் கட்டடம் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளார்கள், 28 பேர் காயமடைந்துள்ளார்கள்.
சரக்கை இறக்கி வைக்கவும், ஏற்றவும் வரும் லாரிகள் கட்டடத்தின் மீது அவ்வப்போது மோதுவது கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து கண்டறிய குழு அமைக்கப்படும் என லக்னௌ இணை காவல் ஆணையர் அமித் வெர்மா தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கிருஷ்ணா நகர் பகுதியில் மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் சில வீடு திரும்பிவிட்டார்கள்.