ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு இலவச இ-விசா வழங்கப்படும்: பிரதமர் மோடி | PM Modi | Putin |

ரஷ்ய அதிபர் புடின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில் பிரதமர் மோடி அறிவிப்பு...
ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு இலவச இ-விசா வழங்கப்படும்: பிரதமர் மோடி
ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு இலவச இ-விசா வழங்கப்படும்: பிரதமர் மோடி
1 min read

ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு, 30 நாள்கள் இலவச இ-விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தனர். அதன்பின் நாட்டின் முக்கிய தலைவர்களின் நினைவிடங்களுக்குச் சென்று புடின் மரியாதை செலுத்தினார். அதன்பின் பிரதமர் அலுவலகத்தில் மோடியுடன் புடின் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

“விரைவில் இலவச 30 நாள் இ-விசா மற்றும் 30 நாள் குழு சுற்றுலா விசாவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மனிதவள இயக்கம் இரு நாட்டு மக்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். தொழில் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி ஆகியவற்றில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். கடந்த 8 தசாப்தங்களாக, உலகம் ஏராளமான ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது. மனிதகுலம் பல சவால்களையும் நெருக்கடிகளையும் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இவை அனைத்திற்கும் மத்தியில், இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம் போல உறுதியாக உள்ளது. உக்ரைன் பிரச்சினையில் அமைதிக்காக இந்தியா ஆரம்பத்திலிருந்தே வாதிட்டது. இந்த விஷயத்தில் அமைதியான மற்றும் நீடித்த தீர்வு காண மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்தியா எப்போதும் தனது பங்களிப்பை வழங்க தயாராக உள்ளது, எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும்.

இந்தியா-ரஷ்யா ஏற்றுமதி வர்த்தகத்தில் புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகளுக்கு இடையே எரிசக்தி துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகில் அமைதிக்காக ரஷ்யாவுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும். உலகில் பயங்கரவாத ஒழிப்பில் முழு கவனத்துடன் செயல்படுவோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாக தோளோடு தோள் ஒன்றாக நின்று போராடி வருகின்றன. இந்தியா-ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கு இடையே உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். 2030ம் ஆண்டு வரை இந்தியா-ரஷ்யா பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்துக்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்றார்.

Summary

Prime Minister Narendra Modi announced on Friday that India will soon offer a 30-day free e-visa to Russian tourists. He made the announcement during a joint press conference with Russian President Vladimir Putin in New Delhi, following their bilateral talks.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in