
பிரதமர் மோடி, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மண்டல் கமிஷன் பரிந்துரையின் பேரில் தயாரிக்கப்பட்ட ஓபிசி பட்டியலில் அவரது ஜாதி இடம்பெற்றிருப்பதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
ஒடிஷாவில் பாரத் நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பிரதமர் மோடி ஓபிசி என்கிற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்லர் என்றும் பொதுப்பிரிவில் பிறந்தவர் என்றும் பேசியிருந்தார். 2000-ம் ஆண்டில்தான் அவருக்கு ஓபிசி அடையாளம் கிடைத்தது என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, காஞ்சி வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தில் மோடி பிறந்தார். 2000-ம் ஆண்டில் குஜராத்தில் இருந்த பாஜக அரசு, காஞ்சி வகுப்பை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பட்டியலில் இணைத்தது. இதன்படி மோடி பிறப்பால் ஓபிசி இல்லை என்று பேசினார்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, பிற்படுத்தப்பட்ட சாதிகள் மத்தியில் காங்கிரஸ் கட்சி மோதலை உருவாக்க நினைக்கிறது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் ஓபிசி பிரிவுக்கு உரிய சமூக நீதியை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டை முன்வைத்து மோடியின் சாதி பற்றி மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. பிரதமரின் சாதியான மோத் காஞ்சி, கல்வி ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர். மண்டல் கமிஷன், அட்டவணை 91 (ஏ) இன் கீழ் ஓபிசிக்களின் பட்டியலைத் தயாரித்தது. அதில் மோத் காஞ்சி சாதியினரும் இடம் பெற்றிருக்கிறார்கள். குஜராத்துக்கான இந்திய அரசின் 105 ஓபிசி சாதிகளின் பட்டியலில் மோத் காஞ்சியும் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 1994 ஜூலை 25 அன்று ஓபிசிக்கள் பட்டியலில் துணைக் குழுவைச் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும் அப்போது குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஏப்ரல் 4, 2000 தேதியிட்ட இந்திய அரசு அறிவிப்பின்படி அதே துணைக் குழு ஓபிசி (பட்டியலில்) சேர்க்கப்பட்டது. இரண்டு சமயங்களிலும் மோடி ஆட்சியில் இல்லை, ஆட்சியில் பெரிய பதவியிலும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.