
கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்துகளுக்கு பதிலளிக்காமல் பிரதமர் மௌன சாமியாராக இருப்பதாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்தார்.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்காக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்துள்ளது. அதேநேரத்தில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதற்கிடையே சமீபத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்திக் கொள்வதாக பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அது சர்ச்சையான நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகமும் அதனை மறுத்து விளக்கமளித்தன.
இதையடுத்து மீண்டும் இதுகுறித்து பேசியுள்ள டிரம்ப், கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாக நிறுத்துவதாக பிரதமர் மோடி கூறியதாகப் பேசினார். இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதிகளை நிறுத்திக் கொள்ளும் என்று தனது நல்ல நண்பர் கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் அவரது அந்த நல்ல நண்பர் மௌன சாமியாராகவே இருக்கிறார். ஏற்கெனவே எப்போதெல்லாம் ஆபரேஷன் சிந்தூரை டிரம்ப்தான் நிறுத்தியதாக அவர் கூறிக்கொள்ளும்போதும் அவர் இதுபோன்றுதான் இருந்தார். இதற்கிடையில் இந்தியா - சீனா இடையிலான வர்த்தம் கடந்த ஆண்டை விட 54.4 பில்லியன் டாலராக இந்த ஆண்டு அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.