
நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 11-ல் நடைபெறவுள்ள நீட் முதுநிலைத் தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை, நாளை (ஆகஸ்ட் 9) விசாரிப்பதாக அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்த வழக்கு விசாரணையில், வழக்கு தொடுத்த மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனாஸ் தன்வீர் வழக்கு விசாரணையை விரைவில் தொடங்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்விடம் கோரிக்கை விடுத்தார். அனாஸ் தன்வீரின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி, இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
முதுநிலை நீட் தேர்வு இரண்டு ஷிப்ட்களில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது தேசிய தேர்வு முகமை. இரண்டு ஷிப்ட்களில் தேர்வு நடத்தப்படுவதால் இரு வேறு கேள்வித்தாள்கள் உபயோகப்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதை ஒட்டி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் அளித்துள்ள மனுவில், `நீட் முதுநிலைத் தேர்வில் 2 கேள்வித்தாள்கள் உபயோகப்படுத்தப்படுவதால் எதாவது ஒரு ஷிப்ட் தேர்வர்களுக்கு எளிதான கேள்வித்தாளும், வேறு ஷிப்ட் தேர்வர்களுக்கு கடினமான கேள்வித்தாளும் கிடைக்க வாய்ப்புள்ளது.
எந்த சூத்திரத்தின் அடிப்படையில் 2 கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படுகிறது என்ற தகவல் தேர்வர்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. இதனால் தேர்வர்களிடையே குழப்பங்களைத் தவிர்க்க இது குறித்த நடைமுறையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கிட ஒரே கேள்வித்தாளை உபயோகித்து நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்ட் ஆக நடத்த வேண்டும் என்பது சில தேர்வர்களின் கோரிக்கையாக உள்ளது.