

நாட்டின் முதல் வறுமை இல்லாத மாநிலமாக கேரளா மாறி உள்ளதாக சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பை வெளியிட்டார்.
கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு, கடந்த 2021-ல் மாநிலத்தின் வறுமையை ஒழிக்கச் சிறப்புத் திட்டங்களை அறிவித்தது. குறிப்பாக அதே ஆண்டில் வெளியான நிதி ஆயோக் தரவுகளின்படி கேரளாதான் நாட்டில் மிகக்குறைந்த வறுமை விகிதம் கொண்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அம்மாநிலத்தில் வறுமையில் உள்ளவர்களின் சதவிகிதம் 0.7% ஆக மட்டுமே இருந்தது.
இதனடிப்படையில் கேரளாவின் மக்கள் தொகையில் சுமார் 64,006 குடும்பங்கள் மிக மிக வறுமையில் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்குச் சிறப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுப்பது, வீடுகளைப் புதுப்பிப்பது, நிலம் வழங்குவது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்மூலம் தற்போது வறுமையில் இருந்த குடும்பங்கள் பலன்பெற்று, ஓரளவு வாழ்வாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனடிப்படையில், நாட்டின் முதல் வறுமை இல்லாத மாநிலமாக கேரளா திகழ்கிறது. இந்நிலையில், கேரள மாநிலம் உருவான நாளான இன்று இதுகுறித்த அறிவிப்பை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-
“கேரள மாநிலம் உருவான தினமான இந்த நாள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஏனெனில் கேரளாவை தீவிர வறுமை இல்லாத முதல் இந்திய மாநிலமாக மாற்றுவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இந்த சட்டப்பேரவை பல வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் மற்றும் கொள்கை அறிவிப்புகளைக் கண்டுள்ளது. வளர்ச்சியடைந்த கேரளாவை உருவாக்குவதில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் தருணத்தில் சட்டப்பேரவை இன்று கூடியுள்ளது. 2021-ல் புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்று தீவிர வறுமை ஒழிப்பு. சட்டமன்ற தேர்தலின் போது மக்களுக்கு அளிக்கப்பட்ட மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்கான தொடக்கமாகவும் அது அமைந்தது” என்றார்.
கேரளா தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டது குறித்த அறிவிப்புக்காக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சியினர், இந்த அறிவிப்பு முழுமையான மோசடி, விதிகளை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று குற்றம்சாட்டி சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையில், இன்று மாலை திருவனந்தபுரத்தில் இதைக் கொண்டாடும் விழா நடைபெறுகிறது. அதில், நடிகர்கள் கமல் ஹாசன், மோகன்லால், மம்முட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.
Pinarayi Vijayan declared Kerala as the state free from extreme poverty in Assembly. He said "Today’s Kerala Piravi marks a place in history because we have succeeded in making Kerala the first Indian state without extreme poverty".