
ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ஃபெர்டினாண்ட் ரொமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியர், பிரதமர் நரேந்திர மோடியை நாளை (ஆக. 5) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கடந்த 2022-ல் பிலிப்பைன்ஸ் அதிபராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு மார்கோஸ் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசு ரீதியிலான உறவுகளின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்துடன் இந்த பயணம் ஒத்துப்போவதால் இது முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக உற்று நோக்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் அதிபருடன் அவரது மனைவியும், அந்நாட்டு முதல் பெண்மணியுமான லூயிஸ் அரனெட்டா மார்கோஸ் மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது.
நாளை (ஆகஸ்ட் 5) தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் மார்கோஸ் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
இதைத் தொடர்ந்து தில்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபடவுள்ளார். அதன்பிறகு பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும்.
அதிபர் மார்கோஸ் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்த பிறகு, ராஷ்டிரபதி பவனில் வைத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநில பெங்களூருவுக்கு மார்கோஸ் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியாவிற்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான அரசு ரீதியிலான உறவுகள் கடந்த நவம்பர் 1949-ல் தொடங்கின. வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, விவசாயம், சுகாதாரம், மருத்துவம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வலுவான ஒத்துழைப்பை இரு நாடுகளும் உருவாக்கியுள்ளன.
முன்னதாக, அதிபர் மார்கோஸ் ஜூனியரின் தந்தையான ஃபெர்டினாண்ட் எம்மானுவேல் எட்ரலின் மார்கோஸ் சீனியர், பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்தபோது கடந்த 1976-ல் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார்.