
பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய வங்கதேசத்தைச் சேர்ந்த நபரை, தானே பகுதியில் வைத்துக் காவல்துறையினர் கைது செய்தனர்.
மும்பையில் மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார் பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான். கடந்த ஜன.15-ம் தேதி இரவில் அவரது இல்லத்திற்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்தார்.
ஆள் நடமாடும் சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்த சயிஃப் அலிகான், அந்த மர்ம நபரைப் பிடிக்க முயன்றுள்ளார். ஆப்போது, சயிஃப் அலிகானின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார் அந்த மர்ம நபர். அதன்பிறகு மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சயிஃப் அலிகான்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சயிஃப் அலிகான் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. தற்போதைய நிலையில், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவர் இல்லம் திரும்புவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சயிஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற நபரை மும்பைக்கு வடக்கே உள்ள தானே பகுதியில் வைத்து இன்று (ஜன.19) காலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வங்கதேசத்தை சேர்ந்த அந்த நபரின் பெயர் மொஹமத் ஷரிஃபுல் இஸ்லாம் ஷஸாத் எனவும், ஏறத்தாழ 6 மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த பிறகு, அவரது உண்மை அடையாளத்தை மறைக்கும் வகையில் விஜய் தாஸ் எனத் தன் பெயரை மாற்றிக்கொண்டதாகவும் காவல்துறையினர் முதற்கட்ட தகவல் அளித்துள்ளனர்.