
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நாடு முழுக்க எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் நாடு முழுக்கப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக ஐந்து மருத்துவர்களுக்கு சிபிஐ இன்று அழைப்பாணை அனுப்பியுள்ளது.
சம்பவம் நடைபெற்ற மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று நள்ளிரவு வன்முறை வெடித்தது. இதில் தரைதளத்தில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு அடித்து நொறுக்கப்பட்டன. காவல் துறையின் வாகனங்கள் சிலவும் தாக்கப்பட்டன. இதுதொடர்பாக, கொல்கத்தா காவல் துறையினர் 9 பேரை கைது செய்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று விளக்கமளித்தார்.
"என்னிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில், நான் மாணவர்கள் மீது பழி சுமத்த மாட்டேன். இந்தச் சம்பவம் துரதிருஷ்டவசமானது. குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம். காவல் துறையினர் விசாரணை நடத்தும் வரை எதுவும் கசியவிடப்படவில்லை. அனைத்து ஆவணங்களையும் நாங்கள் கொடுத்துவிட்டோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் நானும், மேற்கு வங்க மக்களும் துணை நிற்கிறோம். இது மிகப் பெரிய குற்றம். இந்தக் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது மட்டும்தான் ஒரே தண்டனையாக இருக்க முடியும். அப்படி தூக்கிலிடப்பட்டால்தான், பாடம் கற்றுக்கொள்வார்கள். அதேசமயம், குற்றமற்ற யாரும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது.
ஆர்ஜி கர் மருத்துவமனை நேற்று சூறையாடப்பட்டுள்ளது. பிரச்னையை உண்டாக்கியவர்களுக்கும் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள். நான் நிறைய காணொளிகளைப் பார்த்தேன். மூன்று காணொளிகளில் சிலர் தேசியக் கொடியை ஏந்தியிருக்கிறார்கள். அவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். சிலர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். நேற்று காவல் துறையினரும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பொறுமையை இழக்கவில்லை, யாரையும் தாக்கவில்லை. அதற்காக அவர்களுக்குப் பாராட்டுகள். தற்போது வழக்கு எங்களுடையக் கட்டுப்பாட்டில் இல்லை. உங்களுக்கு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று இருந்தால், அதை சிபிஐயிடம் தெரிவிக்கலாம். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது" என்றார் மமதா பானர்ஜி.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா தவிர்த்து நாடு முழுக்க போராட்டம் வலுத்து வருகிறது.
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி மேற்கொண்டார்கள்.
மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்
தில்லி எய்ம்ஸ் வளாகம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்.
மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்.